பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பிரபலமான இடங்களில் ஒன்றாகும். கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், கோவிட் பெருந்தொற்று காரணமாக பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது.  தற்போது நிலைமை சீராகிய நிலையில், பூங்காவிற்கு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என இந்த ஆண்டு, பொங்கல் வருகை அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறையின்போது, பார்வையாளர்களின் இருக்குமென்பதால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, உயிரியல் பூங்கா நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.




 


20 டிக்கெட் கவுன்டர்கள்


இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நுழைவுச் சீட்டு வழங்கப்படும் இடத்தில், பொதுமக்களிடையே நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, 20 டிக்கெட் கவுன்டர்கள் முழுமையாகச் செயல்படுவதோடு, கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படும். மேலும், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு கவுன்டர் அமைக்கப்படும்.


பார்வையாளர்களை வரிசையில் சீராகவும், விரைவாகவும் அனுப்ப ஒவ்வொரு டிக்கெட் கவுன்டரையும் சவுக்கு கொம்புகள் கொண்டு தனியாக தடுப்பு அமைக்கப்படும். நுழைவுசீட்டு வழங்கிய பிறகு, பூங்காவினுள் பார்வையாளர்கள் விரைவாக செல்வதற்கு ஒரே நேரத்தில் 10 வரிசைகளில் சோதனை செய்யப்பட்டு தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பூங்கா நுழைவு வாயிலிலேயே காவல் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்படும்.


150 பேருந்துகள்


பொங்கல் விடுமுறை நாட்களில், பார்வையாளர்களின் வசதிக்காக, வண்டலூர் வழித்தடத்தில் கூடுதலாக 150-ற்கும் மேலான பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 வயதுக்குட்பட்ட சிறியவர்கள் காணாமல் போகும் சூழ்நிலைகளைத் தவிர்க்க சிறியவர்களின் கைகளில் மணிக்கட்டு பட்டை கட்டப்பட்டு அதில் பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் எழுதப்படும்.


தீவிர கண்காணிப்பு


கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில், காவல்துறை ஊழியர்களுடன் கண்காணிப்பு கேமரா ஆபரேட்டர்கள் தொடர்ந்து கண்காணித்து, குழந்தை காணாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், குழந்தைகளை கண்டறிவதில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்கலிகள் வழங்கப்படும்.


 


உதவி மையம்


16.01.2023 மற்றும் 17.01.2023 ஆகிய தேதிகளில் பார்வையாளர்களுக்காக சிறப்பு உதவி மையம் மற்றும் மருத்துவ உதவி மையம் பூங்காவின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும். மருத்துவக் குழுவுடன் 4 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் உயிரியல் பூங்காவிற்குள் எந்த அவசரச் சூழலையும் கையாள நிறுத்தப்படும். பூங்காவில் உள்ள கழிப்பறைகளுடன், கூடுதலாக 15 எண்ணிக்கையிலான உயிரி கழிப்பறைகள் பூங்காவின் பல்வேறு இடங்களில் வைக்கப்படும். தடையில்லா மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




காணும் பொங்கல்


விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் விலங்குகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.ஊண் உண்ணி விலங்கு இருப்பிடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிக்காக சீருடை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களுக்காக கூடுதல் அங்கீகரிக்கப்பட்ட குத்தகை விற்பனை நிலையங்கள் 1 உணவகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17.01.2023 அன்று (காணும் பொங்கல்) செவ்வாய்க் கிழமை பார்வையாளர்களுக்காக பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.