இதுதொடர்பான அறிக்கையின் படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்  நள்ளிரவு 12 மணி  வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் மிகு நேரங்களில்  அதாவது மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து முனையங்களில் இருந்தும் செல்லும் கடைசி  மெட்ரோ ரயில் சேவை  இரவு 11 மணிக்கு பதிலாக  12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18ம் தேதி மட்டும்  அனைத்து முனையங்களில் இருந்தும்  புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக  காலை 4 மணி முதல் இயக்கப்படும். எனவே, ஜனவரி 13,14 மற்றும் 18ம்  தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.






போக்குவரத்து சேவை:


தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களால் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல். இந்த பொங்கலானது ஜனவரி 14 மற்றும் 15 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தநிலையில், இந்த பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் தங்கி இருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படை எடுக்க தொடங்கிட்டனர். 


இதற்காக இன்று முதல் வருகின்ற 14ம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.  பொங்கல் பண்டிகை முடிந்ததும் வெளியூர் செல்லும் தயாராக இருக்கும் வசதிகேற்ப வருகிற 18ம் தேதி மற்றும் 19 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


அதன்படி, சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களிலிருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன. இதையடுத்து, இன்று முதல் வருகிற 14ம் தேதி வரை மொத்தமாக 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளும், பிற நகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


 


6 முக்கிய இடங்கள்: 


வெளியூர் செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமின்றி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


மேலும், மேற்குறிப்பிடப்பட்ட 6 இடங்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்ல ஏதுவாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்- பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்- செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புகார் எண்கள்:


தமிழ்நாடு முழுவதும் இதுவரை சிறப்பு பேருந்துகளில் செல்வதற்காக மட்டும் 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் ஏதேனும் புகார்கள் இருந்தால் 9445014450, 9445014436 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்பினால் கூட கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.