வண்டலூர் உயிரியல் பூங்கா
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தளமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம்.
2000 விலங்குகள்
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால், வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே தினத்தையொட்டி ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து இருந்தனர்.
மே மாதம் முழுவதும் செயல்படும்
வண்டலூர் உயிரியல் பூங்காவை பொருத்தவரை பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காக, வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விடுவது வழக்கம். இந்த நிலையில், மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவு பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மே மாதம் முழுவதும் எந்தவித விடுமுறை இல்லாமல் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் கூட விடுமுறை இல்லாமல் செயல்படும் என்பதால் அதிக அளவு பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பார்வையிடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மாத இறுதிக்குள், லயன்ஸ் சபாரி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்