சீதாராம் யெச்சூரி மறைவு - வைரமுத்து அஞ்சலி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்  சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி சென்னை தி.நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு  கவிஞர் வைரமுத்து நேரில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து ;


சீதாராம் யெச்சூரி பொதுவுடைமை இயக்கத்தின் போர் சிங்கம். அவரது மறைவு என்பது ஒரு கட்சிக்கான இழப்பு அல்ல. தேசத்துக்கான இழப்பு. ஒரு கட்சிக்காக மட்டும் போராடுகிறவன் அரசியல்வாதி என்று அறியப்படுகிறான். தேசத்திற்காக போராடியவன் தேசியவாதி என அறியப்படுகிறான். 


அவருடைய இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரது இடத்தை நிரப்ப நூறு அறிவுஜீவிகள் கூடி நிரப்ப வேண்டும் என்பது என்னை போன்றவர்களின் எண்ணம். 


தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது அவர் மீது கூடுதல் பாசத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. நெருக்கடி நிலையில் இருந்து இந்துத்துவா வரைக்கும் சமரசம் இல்லாமல் போராளியாக தன் வாழ்நாள் முழுவதும் பயணித்தவர் தோழர் சீதாராம் யெச்சூரி.


நாடாளுமன்றமும் , நாடும் கூர்ந்து கவனித்தன


அவரிடம் எனக்கு பிடித்த குணம் அஞ்சாமை.  நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்ற எழுகிறார் என்றால் அத்தனை கண்களும் அவர் மீது மொய்க்கும். அத்தனை செவிகளும் அவர் மீது நிலை கொள்ளும். அவரின் கருத்துக்கு நாடாளுமன்றமும் நாடும் கூர்ந்து கவனித்தன.


அவரின் அஞ்சாமைக்கு காரணம் அவரது சத்தியம் பொதுவாழ்கைக்கு வருகிற எவனுக்கு சத்தியம் இருக்கிறதோ எவன் நேர்மையின் கர்ப்பத்தில் இருந்து வெளி வருகிறானோ எவன் உண்மையை விட்டு விலகாமல் இருக்கிறானோ அவன் அஞ்ச மாட்டான் என்றார்.


மாணவர் முதல் மரணப்படுக்கை வரை தன் வாழ்வை இயக்கத்திற்கும் நாட்டுக்கும் அர்ப்பணித்து சென்ற ஒரு மாபெரும் தலைவர்  சீதாராம் யெச்சூரிக்கும் ஆழ்ந்த இரங்கல்.


யெச்சூரி என்பது ஜாதி பெயர் அல்லவோ ஜாதிப் பெயர் அவர் வைத்துக் கொள்ளலாமா என்று அறியாதவர்கள் சிலர் கேட்கிறார்கள்  யெச்சூரி என்பது ஜாதி பெயர் அல்ல. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட அவரது பூர்வ கிராமத்தின் பெயர் எச்சூரி. தன் பெயரில் தன் மண் நினைவில் இருக்க வேண்டும் என்பது எச்சூரி என்பதை சேர்த்து இயங்கினவர் என்றார்.


மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதா இல்லை , இவராக சென்று கேட்டாரா ?


அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்திற்கு பதிலளித்த வைரமுத்து, குறை கேட்பு நிகழ்ச்சிகளை சொல்லத்தான் அழைக்கப்படுகிறார்கள். குறைகளை சொல்வது தப்பில்லையே குறைகளை சொல்வது என்பது ஒரு குடிமக்களின் உரிமை தானே கேட்டுக்கொள்வது ஆளும் தரப்பின் கடமைதானே. உரிமை கேட்டவனுக்கு இருக்கிறது கடமை ஆள்கிரவனுக்கு இருக்கிறது. அந்த கேள்விகளில் எனக்கு ஒன்றும் தவறாக தோன்றவில்லை.


இயல்பாக அந்த நபரை நான் அறிவேன், என்னோட பல ஆண்டுகள் பயணித்தவர், இயல்பாகவே அவர் நகைச்சுவையாக பேசுவார், அந்த நகைச்சுவையை தன்னுடைய கேள்வியும் கேட்டு இருக்கிறார். மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதா இல்லை இவராக சென்று கேட்டாரா? மன்னிப்புதானா என்று முழுமையாக தெரியாமல் இது குறித்து கருத்து கூறுவது ஆகாது என்றார்.


திரைத் துறையில் மட்டுமல்ல , நாட்டின் எல்லாத் துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள் 


ஹேமா கமிட்டி குறித்து பேசிய வைரமுத்து, ”ஹேமா கமிட்டி என்பது எல்லாம் மாநிலங்களிலும் முக்கியமாக எல்லாத் துறைகளிலும் முக்கியமாக அமைக்கப்பட வேண்டிய அமைப்பு. திரைத் துறையில் மட்டுமல்ல நாட்டின் எல்லாத் துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள்.


பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவற்றிலிருந்து முற்றும் விடுபட வேண்டும் என்றால் பெண்மையில் இருக்கிற பெண்ணை என்ற ஒரு கருத்தை நீக்கி விட வேண்டும்.


பெண்ணினம் பலவீனமான பாலினம் அல்ல. இந்திய பள்ளி கல்வித்துறை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பயிற்சியை கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆண்களுக்கு ஆண்மை, பெண்களுக்கு பெண்மை என பிரிக்கப்படுவதும் நாட்டில் வேதங்களை ஏற்படுத்துகிற மதிப்பீடுகள். ஆணும் பெண்ணும் சரி சமம் தான் இதில் யாரும் யாரையும் சீண்டுவது என்பது ஒரு பாலினம் பலவீனமானது என்பதை காட்டுவதாக உள்ளது. விளையாட்டு, எழுத்து பயிற்சி மட்டும் போதாது. உன் குழந்தைகளுக்கு தாங்கள் தங்களையே காத்துக்கொள்கிற உடல் வலிமையை ஊட்ட வேண்டும்.  ஒரு புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கமாகத்தான் ஹேமா கமிட்டியை பார்க்கிறேன்” என்றார்.