செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் நெரும்பூர், தண்டல் நகரில் அருகே உள்ள பாலாற்று பகுதியில் சென்னை பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாற்று மற்றும் தொல்லியல் துறையில் 2ஆம் ஆண்டு பயிலும்  மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக தொல்லியல் துறை இயக்குனர் சௌந்தர்ராஜன் தலைமையில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். 



இதனையொட்டி, தொல்லியல் துறையின் பழைய பதிவேடுகளில் உள்ள தகவல் மற்றும் சர்வே அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. ஜினுகோஷி களப்பணி மேற்பார்வையாளராக இருந்து அகழாய்வை கவனித்தார். இந்த ஆராய்ச்சியின்போது, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள்,  கீழ்பகுதி முக்கோண வடிவம் கொண்ட பானையின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அக்காலத்தில் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ரௌலெடெட் (Rouletted) என்கின்ற முக்கோண-சாய்சதுர குறியீடுகள்-வடிவமைப்புகள் கொண்ட மண்பாண்ட உடைந்த பாகங்கள். அடையாளம் தெரியாத சுடுமண் பொம்மையின் பாகங்கள். சில்லு எனப்படுகின்ற நொண்டி விளையாட்டு கற்கள், மாவரைக்கும் கல்லின் பாகங்கள், கண்ணாடி மற்றும் குவார்ட்ஸ் மணிகள், கண்ணாடி கசடு, இரும்பு கசடு , தாமிரத் துண்டுகள் (ஒன்று அலுமினியம் கலந்ததாக உள்ளது), கரி துண்டுகள், முதலியன கண்டெடுக்கப்பட்டுள்ளது  .


இரும்புக் காலம்


இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை  சௌந்தராஜன் கூறுகையில், முதலில் இரும்புக் காலத்தவர்களால் இப்பகுதி வாழ்விடமாகக் கொண்டு ஆரம்ப சரித்திரக் காலம் வரை இருந்தனர். இடைக்காலத்தைச் சேர்ந்த பனையோடுகள் மற்றும் முக்கோண வடிவு அடிப்பாகம் கொண்ட மண்பாண்டகள் மேற்மட்டங்களில் காணப்பட்டன. கருப்பு மற்றும் சிகப்பு நிறம் கொண்ட அத்தகைய நகல்-மண்பாண்டங்கள் இந்தியாவில் வெறேங்கும் கிடைக்கப் பெறவில்லை. அத்தகைய அசல் ம்ண்பாண்டங்கள் ரோம் நகரத்தில் இருந்து வந்தன. இதில் இருந்து, இடைக்கலத்தில், இப்பகுதியில் வணிகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அதிகம் நடந்துள்ளன என்று தெரிகிறது.




இடைகாலத்தில் சோழர், பாண்டியர்களின் கீழ் இப்பகுதிகள் வந்துள்ளன. பிறகு, விஜயநகர அரசர்கள் மற்றும் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்கள் வாழ்ந்துள்ளனர். மெக்கன்ஸியால் தொகுக்கப் பட்ட ஆவணங்களில், “குறும்பர்” எனப்பட்டவர், இப்பகுதிகளில் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்ததாக குறிப்புகள் உள்ளன. அதில் நெரும்பூரும் அடங்கும். திருவாலீஸ்வரர் கல்வெட்டுகளின் படி, “திருமடைவிளாகம்” என்ற பகுதி கோவிலைச் சுற்றி இருந்தது, அங்கு கைக்கோளர்கள் நூற்பில் ஈடுபட்டு வரியும் செலுத்தி இருந்தனர். 




பாலாறு நாகரிகம்


சோழர் காலத்தில் பாலாற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்ததால், உள்ளூர் நீர்வழி போக்குவரத்து மூலம் பொருட்கள் இப்பகுதிகளில் இருந்த துறைமுகங்களுக்கு வந்து கொண்டிருந்தன. வாயலூர் என்று இப்பொழுதும் இருக்கின்ற ஊர், திருப்பிளவாயில் என்று பல்லவ கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆகையால், நெரும்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்கள், இப்பகுதியில், முகத்துவாரத்தில் உள்ள துறைமுகப் பட்டினங்கள் மூலம் மற்ற இடங்களுக்கு, நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சதுரங்கப்பட்டினக் கோட்டை, ஆலம்பரை கோட்டை இன்னும், இன்றும் இருக்கின்றன.