புதிய பாலம் கட்டுமான பணிக்காக விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் நாளை மறுநாள் (வியாழன் கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் - மாம்பழப்பட்டு - திருக்கோவிலூர் சாலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி எல்லையில் உள்ள சிறிய பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்புக்குள்ளாகியது. இந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டும் பணி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற ஜூன் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பாலம் கட்டும் பணி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பச்சையம்மன் கோவில் அருகில் உள்ள இந்திரா நகர் வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும்.
திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் செல்லும் 4 சக்கர வாகனங்கள் திருக்கோவிலூர்- வேட்டவலம் சாலையில் வலது புறத்தில் உள்ள சிமெண்ட் சாலை (தேவனூர்) வழியாக சென்று ரெயில்வே சுரங்க பாதை, வெள்ளம்புத்தூர், திருமலைப்பட்டு மற்றும் வடகரை தாழனூர் சாலை வழியாக விழுப்புரத்துக்கு செல்ல வேண்டும். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் வரும் 4 சக்கர வாகனங்கள் விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் வலது பக்கத்தில் பிரிந்து வடகரைதாழனூர் சாலை, திருமலைப்பட்டு சாலை வழியாக வெள்ளம்புத்தூர் ரெயில்வே சுரங்க பாதை மற்றும் தேவனூர் வழியாக திருக்கோவிலூர் - வேட்டவலம் சாலையில் இணைந்து திருக்கோவிலூர் செல்ல வேண்டும்.
விழுப்புரத்திலிருந்து அரகண்டநல்லூர் வழியாக திருக்கோவிலூர் செல்லும் பஸ்கள் அரகண்டநல்லூரில் நிறுத்தப்பட வேண்டும். அதேபால் திருக்கோவிலூரிலிருந்து அரகண்டநல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் பஸ்கள் அரகண்டநல்லூரில் நிறுத்தப்பட வேண்டும். திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கடலூர்-திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையில் அரசூர் வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அரசூர் வழியாக கடலூர் - திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் திருக்கோவிலூர் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்