வேலை தொடர்பான தகவல்களாக இருந்தாலும் சரி   , குடும்பம் சார்ந்த தகவல்களாக இருந்தாலும்  சரி அதனை  உடனுக்குடன் பரிமாறுவதற்கு வாட்ஸ்அப் செயலி மிகவும் உபயோகமாக உள்ளது .


தகவல் பரிமாற்றம் மற்றும் இல்லாமல் , பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை விடியோக்களை தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு எளிமையான முறையில் , விரைவாக பரிமாறுவதற்கும் வாட்ஸ்அப் பெரிதும் பயன்படுகிறது .




தகவல் தொழில்நுட்ப துறையின் அண்மைய தரவுகளின்படி , உலகில் 80  கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் ஃபோன்  பயனாளர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதாகவும் , உலகில் அதிகம் உபயோகிக்கும் அப்ளிகேஷன்களில் வாட்ஸ்அப் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்தியாவிலோ அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்  முதல் இடத்தை பிடித்துள்ளது.



வாட்ஸ் அப்பால் பல பயன்கள் இருந்தாலும் , சமூக விரோதிகள் அவர்களுடைய தீய செயல்களுக்கு வாட்ஸ அப் செயிலியையே பெருமளவில்  பயன்படுத்துவது , மிகவும் வருத்தப்பட கூடிய செய்தியாகவே உள்ளது .


இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் அருகே வாட்ஸ்அப்  மூலம் மது பாட்டல்கள் விற்று வந்த இரு இளைஞரை வாணியம்பாடி நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர் .


 




திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பெருமால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (25 ) பூ வியாபாரம் செய்பவர் . அதே போல் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (24 ) நியூ டவுன் பகுதியிலே பெட்டி கடை வைத்து நடத்தி வருகின்றார் .


நண்பர்களான ஜனார்த்தனன் மற்றும் சரவணன் இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது  , இந்த ஊரடங்கை வைத்தே பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டிய இந்த இரண்டு இளைஞர்கள் , திருப்பத்தூர் , ஏலகிரி மலை மற்றும் ஜவாது மலை பகுதிகளில் காய்ச்சப்படும் சாராய வகைகளையும் மற்றும் பெங்களூரு , ஆந்திரா பகுதிகளில் இருந்து திருட்டு தனமாக கடத்தி மது வகைகளையும்  பெருமால்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கடந்த 10  நாட்களாக  விற்று வந்தனர் .





 
அவர்களது தொழில் சூடு பிடிக்கவே , அவர்களது வாடிக்கையாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும் , அவர்கள் இருப்பு வைத்திருக்கும் மது வகைகள் மற்றும் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை புகைப்படத்துடன்  தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிய படுத்தவும் "சரக்கு" என்ற வாட்ஸ்அப்  குழுவை அமைத்து கள்ளத்தனமாக சாராயம் மற்றும் மது பாட்டல்களை விற்று வந்துள்ளனர் . இந்த குழுவில் 30  கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர் .


இது குறித்து வாணியம்பாடி நகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , ஜனார்த்தனன் மற்றும் சரவணனை பின் தொடர்ந்த போலீசார் , அவர்கள் சரக்கை கடத்தி கொண்டு பெருமால்பேட்டை பகுதிக்குள் நுழைய முற்படும் பொது அவர்கை வளைத்து கையும் களவுமாக பிடித்தனர் .


மேலும் அவர்களிடம் இருந்த 105 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர் .


அவர்கள் செல்ஃபோன்களை ஆய்வு செய்த பொழுது அவர்களுடைய வாட்ஸ்அப்  குழுவை பற்றி அறிந்த போலீசார்  அந்த குழுவுக்கு அட்மினாக ஜனார்த்தனன் மற்றும் சரவணன் செயல் பட்டது தெரிய வந்தது அவர்களை சட்டவிரோதமாக மது விற்றால் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் , மேலும்  அந்த குழுவில் உறுப்பினராக உள்ள அனைவரையும் விசாரிக்க முடிவுசெய்துள்ளனர் .