தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுக்கொண்டிருந்த கார், ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சென்னை காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 29ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்தபோது, சைரன் ஒலித்தபடி நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. இதனைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டுள்ளார். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அனைவரும் வழிவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த வீடியோ காட்சியை சென்னை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.


 






முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 29ஆம் தேதி கோவைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, தனது வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்றபோது, இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.


முன்னதாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் கவசத்தை அணிந்து கொண்டு கொரோனா வார்டை ஆய்வு செய்தார். சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் நேரடியாக நலம் விசாரிக்கும் வீடியோ  சமூக ஊடங்களில் வெளியாகி வைரலானது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து  காணப்படும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் முதல்வர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.  




முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில். “அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்களா? கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்துதான் இன்னொருவரிடம் பரவுகிறது, அதனால், தொற்று தங்கள் மேல் பரவாமல் இருப்பதற்கு தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதுபோல, நீங்களும் மற்றவருக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் கொரோனா சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை தடுத்திட முடியும். கடந்த 24-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ந் தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.


மக்கள் கையில் தான் ஊரடங்கு; முதல்வர் ஸ்டாலின் சூசகம்!


சென்னையில் 7 ஆயிரத்தை எட்டிய கொரோனா பாதிப்பு தற்போது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் முழுமையாக குறைந்துவிடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் இந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. எனவே, கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.


முழு ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மையே. இதனால்தான் கொரோனா நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவிலே அடுத்த கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்போகிறோம். இதை பொருளாதார நிபுணர் அபிஜித்பானர்ஜிகூட பாராட்டியுள்ளார். இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது மக்களின் கையில்தான் உள்ளது” என்று பேசினார்.