சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய்புதூரை சேர்ந்தவர் ராஜா (30). இவர் அதே பகுதியில் ஊறுகாய் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ஆம் தேதி இவரும், அவருடன் காசாளராக பணியாற்றி வரும் சிபிசக்கரவர்த்தியும் (28) தொழில் காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மரக்காணம் பகுதிக்கு ஒரு காரில் புறப்பட்டனர். திண்டிவனத்தை அடுத்த பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், அந்த காரை திடீரென வழிமறித்து கார் கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கியதோடு கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்து 30 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த ஊறுகாய் கம்பெனியில் பணியாற்றி ஏற்கனவே பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (25), மணிகண்டன் (20), தற்போது ஊறுகாய் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வரும் மனோஜ்குமார் (27) மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட சென்னை சிட்டி ஆயுதப்படை காவலரான சென்னை புதுப்பேட்டை சாமி தெருவை சேர்ந்த செல்வக்குமார் (46) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் செல்வக்குமார், பன்னீர்செல்வம், மனோஜ்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரையும் கடந்த 18-ந் தேதியன்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர் செல்வக்குமார், ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைதாகி சென்னையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவருடன் நட்பு ஏற்பட்ட சென்னை கோவூரை சேர்ந்த வேணுகோபால் மகன் கூலிப்படை தலைவனான திலீப் (27) என்பவர் மூலம் பணம் பறித்தது தெரியவந்தது. திலீப்புக்கு செல்வக்குமார் வகுத்து கொடுத்த திட்டத்தின் கீழ் திலீப், தனது கூட்டாளிகள் 5 பேருடன் பெருமுக்கல் பகுதியில் ராஜாவின் காரை வழிமறித்து கத்திமுனையில் பணத்தை பறித்து சென்றனர்.
பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் செல்வக்குமார், மனோஜ்குமார், பன்னீர்செல்வம், மணிகண்டன் ஆகியோர் சென்னைக்கு காரில் சென்று திலீப்பை சந்தித்து தங்களுக்கு சேர வேண்டிய பங்கு தொகையான 9 லட்சத்தை பெற்றனர். தங்கள் சதித்திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் அதை மதுபானம் அருந்தி கொண்டாடுவதற்காக 4 பேரும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட போது திண்டிவனம் பகுதியில் 4 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்த 9 லட்சம் மற்றும் காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படை தலைவனான திலீப் மற்றும் அவனது கூட்டாளிகள் 5 பேரை தனிப்படை போலீசார், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே கைதான செல்வக்குமார் கொடுத்த தகவலின்பேரில் சென்னையில் பதுங்கியிருந்த திலீப் மற்றும் அவரது கூட்டாளியான சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த இளையகுமார் மகன் அஜில்குமார் (19) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து பிரம்மதேசத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததோடு திலீப்பிடம் இருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் அஜில்குமாரிடம் இருந்த 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, திலீப், அஜில்குமார் ஆகிய இருவரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான கூலிப்படை தலைவன் திலீப் மீது ஆவடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.