சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று காலை எட்டு முப்பது மணிக்கு  விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 117 பயணிகளும், 6 விமான ஊழியா்களும் என 123 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானி கண்டுபிடித்தாா். அதே நிலையில் விமானத்தை தொடா்ந்து இயக்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். 



 

இதையடுத்து விமானத்தை தொடா்ந்து இயக்கவேண்டாம். மீண்டும் சென்னைக்கே திரும்பி வரும்படி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனா். அத்துடன் சென்னை விமான நிலையத்தில், அந்தமான் விமானம் அவசரமாக தரை இறங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விமான நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் விமானம் தரை இறங்குவதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் தயார் செய்து வைத்திருந்தனர்.



 


 

இதனையடுத்து பாதி வழியிலேயே அந்தமான் சென்ற விமானம், சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்து வைத்திருந்ததால், எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.

 



 

இதனால் விமானத்தில் இருந்த 123 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்கள். பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பயணிகள் ஓய்வுகூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். விமான என்ஜினீயர்கள் குழுவினர், விமானத்தில் ஏறி எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் பயணிகளை மாற்று விமானம் மூலம் அந்தமானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

விமானத்தில் கோளாறு இருப்பது தெரிந்தவுடன் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட விமானிக்கு விமான நிலைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.




 


மேலும் செய்திகள்



 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X