விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இடையன்சாவடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42), முந்திரி வியாபாரி. இவர் முந்திரி பருப்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனிக்கு அனுப்பி வந்தார். இந்நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியின் உரிமையாளர்களான ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (39), சூரம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (42) ஆகியோர் ராதா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு முந்திரி பருப்பு கேட்டுள்ளனர்.




இதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்த அவர்கள் இருவரும்  6 லட்சத்து 50 ஆயிரத்திற்கு முந்திரி பருப்பு வாங்கினர். அதற்காக ஒரு லட்சம் கொடுத்தனர். மேலும்  3 லட்சத்து 97 ஆயிரத்தை தங்கள் கம்பெனி பெயரில் உள்ள நிதி நிறுவனத்தின் காசோலையாக கொடுத்தனர். மீதி ஒரு லட்சத்து 53 ஆயிரத்தை விஜயகுமாரின் வங்கி கணக்கில் இருந்து அனுப்புவதாக கூறிச்சென்றனர்.



அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அந்த காசோலையை, ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இது குறித்து ராதாகிருஷ்ணன், பணம் கேட்ட போது கோவிந்தராஜ், தான் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியில் ஈரோடு மாவட்ட தலைவராகவும், விஜயகுமார் மாநில துணை செயலாளராகவும் இருப்பதாக கூறி மிரட்டியுள்ளனர். இது பற்றி ராதாகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.



இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், இருதயராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஈரோட்டுக்கு விரைந்து சென்று விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் போலீசார், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். மேலும் முந்திரி, பருப்பு, புளி, பூண்டு, பாக்கு, மணிலா பயிறு, சீரகம், மஞ்சள், துணி, ஆயில் போன்றவற்றை கொள்முதல் செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அது உண்மையான கம்பெனிதானா என ஆராய்ந்து வியாபாரம் செய்யவும், இது போல் மோசடி ஆசாமிகள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.


 


Annamalai Press meet: KT ராகவன் வீடியோ.. வாய் திறந்த அண்ணாமலை!