தமிழகம் முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டது. அதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தற்போது, ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முதல் அலை இரண்டாம் அலை என வைரஸ் தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருந்து தற்போது கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தகவல்களுடன் கூடிய தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு 11-ஆம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதனையொட்டி நாளை முதல் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 96 உயர்நிலைப்பள்ளி மற்றும் 149 மேல்நிலைப் பள்ளி என 245 பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
அதையொட்டி நாளை முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 131 ஆசிரியர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இதில் இன்று வரை 6 ஆயிரத்து 220 ஆசிரியர்கள் தமிழக பள்ளி கல்வித்துறையின் அறிவுறுத்தலில் பேரில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் மீதமுள்ள 911 ஆசிரியர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதை யொட்டி பள்ளிகளை தூய்மை செய்யும் பணியிலும் பள்ளி நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பள்ளியில் நுழைவாயிலிலேயே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பள்ளியின் நுழைவு வாசயிலில் சமூக இடைவெளியில் மாணவர்கள் வருவதற்கான வட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி வகுப்பறைகளில் பள்ளி மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஆங்காங்கே அதற்கான மார்க்கிங்களும் செய்யப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் சுமார் 20 பள்ளி மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்துகொண்டும், முகக்கவசங்களை அணிந்துக்கொண்டும் பாடங்களை கவனிக்கும் வகையில் அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் வருகைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் வருகைக்காக பள்ளிக்கூடங்கள் காத்திருக்கின்றன.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X