சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகியதால், 131 பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை ( Chennai Aiport ) : சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4:55 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மதுரைக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். விமானத்தில் பயணம் செய்ய 53 பயணிகள் இருந்தனர். அவர்கள் மாலை 3:30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து, பாதுகாப்பு சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 7 மணி ஆகியும் அந்த விமானம் புறப்படவில்லை.
மதுரை பயணிகள் விமானம்
இந்த நிலையில் மாலை 6:10 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் 78 பயணிகள் பயணிக்க இருந்தனர். அந்த விமானமும் தாமதமாக, இரவு 7 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும், என்று அறிவிக்கப்பட்டது. அதோடு மாலை 4:55 மணி விமானத்தில் மதுரை செல்ல இருந்த 53 பயணிகளும் இந்த விமானத்தில் சேர்த்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம்:
ஆனால் இரவு 8 மணி ஆகியும், மதுரை செல்ல வேண்டிய விமானம் புறப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து மதுரைக்கு 2 விமானங்களில் செல்ல வேண்டிய, 131 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்தனர். அதோடு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அதிகாரிகளிடம் காட்டும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர். அதன் பின்பு இரவு 8:30 மணிக்கு, இரண்டு விமானங்களிலும் பயணிக்க வேண்டிய 131 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மதுரைக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.
போதிய பயணிகள் இல்லாமல்
இந்த விமானங்கள் தாமதத்திற்கு என்ன காரணம் என்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு தெளிவாக அறிவிக்கவில்லை. ஆனால் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் இல்லாததால், இந்த விமானங்கள் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாலை 5:55 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று இரவு 11:35 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் பயணிக்க, போதிய பயணிகள் இல்லாமல் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது