சென்னை விமான நிலையத்திற்கு,  துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.70 கோடி மதிப்புடைய, 4.7 கிலோ தங்க கட்டிகளை, சென்னை விமான நிலையத்தில், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 

டிரான்சிட்  விமான பயணிகள்

 

சென்னை ( Chennai Airport ) : சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து, விமானங்களில் கடத்தி வரப்படும் கடத்தல் தங்க கட்டிகள், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலரின் உதவிகளுடன், சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் கொண்டு செல்லப்பட்டு, கடத்தல் ஆசாமிகளிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், குறிப்பாக துபாயிலிருந்து ஒரு விமானத்தில் வந்துவிட்டு, மற்றொரு விமானத்தில் இலங்கை செல்லும், டிரான்சிட்  விமான பயணிகள், கடத்தி வரும் கடத்தல் தங்க கட்டிகள், இதை போல் சட்ட விரோதமாக வெளியில் எடுத்துச் செல்லப்படுவதாகவும், சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

பயணிகளைப் போல் நடித்து

 

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சாதாரண உடையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளைப் போல் நடித்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ஹவுஸ் கீப்பிங் பணியில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் சீனிவாசன் (32), என்பவர் மீது, மதிய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் விமான நிலையத்தில் பணி முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக வெளியில் வந்த போது, அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

 

வீட்டில் இருந்து 3.70 கிலோ தங்க கட்டி

 

அவருடைய உள்ளாடைக்குள் சுமார் ஒரு கிலோ எடை உடைய தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சீனிவாசனை வெளியில் விடாமல், விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, தீவிர விசாரணை நடத்தினர். அதோடு குரோம்பேட்டை பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள, சீனிவாசனின் வீட்டிற்கு அழைத்து சென்று, அவருடைய வீட்டை சோதனை செய்தனர். அவருடைய வீட்டில் இருந்து 3.70 கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

 

தங்கம் கடத்தி வரும் கடத்தல் ஆசாமிகள்

 

அதன்பின்பு சீனிவாசனிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே ஹவுஸ்கீப்பிங் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய தினகரன் (50), என்பவரும் இந்த தங்க கடத்தலில் முக்கிய ஆசாமி என்று தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பெயரில் தான், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கடத்தல் ஆசாமிகள், சீனிவாசனுக்கு அறிமுகம் ஆனார்கள் என்றும், தெரிய வந்தது. இதை அடுத்து அதே குரோம்பேட்டையில் வசித்து  வந்த, தினகரனையும், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

 

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி

 

இவர்கள் இருவரிடம் இருந்து மொத்தம் ரூபாய் 2.70 கோடி மதிப்புடைய 4.7 கிலோ, தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்துள்ளனர். இந்த தங்க கட்டிகள் அனைத்தும், துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட   கடத்தல் தங்கங்கள் என்று தெரிய வந்தது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும், மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில், தொடர்ச்சியாக பல கோடி மதிப்புடைய கடத்தல் தங்க கட்டிகள், பறிமுதல் செய்யப்படுவதும், இந்தக் கடத்தலின் பின்னணியில், சென்னை விமான நிலையத்தில், தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களும் செயல்படுவது, சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.