திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் எடை போடாததால் 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாற்றுகளாக முளைத்து விட்டது.


வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மருதாடு கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர். 


 



 


இந்த நிலையில் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை கடந்த 10 நாட்களாக எடை போடாததால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்.கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது. இதில் விவசாயிகள் கொண்டு வந்த 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால்  நெல் மூட்டைகள் நாற்றுகளாக முளைத்துவிட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.


இதையடுத்து தகவலறிந்த வந்தவாசி திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார் அப்போது அதிகாரிகளை அழைத்து விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் அனைத்தும் உடனடியாக எடை போட வேண்டும் அவர்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநில மக்கள் செய்தி   தொடர்பாளர் வாக்காடை  புருஷோத்தமனிடம்  கேட்டபோது,


‛‛திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் உள்ளடக்கிய பெரணமல்லூர் ,தெள்ளார் வந்தவாசி ஒன்றியங்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டு 18 லட்சம் மூட்டைகள்  தற்போது அறுவடைக்கு வந்ததுள்ளது. கொள்முதல் செய்வதற்கு மேல் நிமிலி, கொடுங்கலூர், மழையூர் நேரடி கொள்முதல் நிலையங்கள் வந்தவாசி வட்டாரத்தில் இயங்கி வருகிறது. 


 



 


இந்நிலையில் வந்தவாசி, தேசூர் உள்ளிட்ட மார்க்கெட் கமிட்டியில் தனியாரில் மூட்டையின் விலை 900 ரூபாய். அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையத்தில் தான் விற்பனைக்கு கொண்டு சென்றனர். ஒரு நிலையத்திற்கு 5000 மூட்டைகள் வீதம் வந்த மூட்டைகள் அனைத்தும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. எடைபோடாமல் திறந்தவெளியில் தேக்கி வைத்துள்ள இந்த நெல் மூட்டைகள் தற்போது மூன்று நாட்களாக பெய்த 26 சென்டிமீட்டர் மழையால் நனைந்து நெற்கல் நாற்றுகளாக முளைத்து வருகின்றன. சொர்ணவாரி பருவத்தில் 10 லட்சம் மூட்டைகள் விற்பனைக்கு வரும். எனவே விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க தற்காலிக சீட்டு கொட்டகை அமைத்து தர வேண்டியும் நிரந்தரமாக அப்பகுதியில் நெல் குடோன் ஒன்றையும் தமிழக அரசு சார்பில் கட்டி தர வேண்டியும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.



 



 


இதுமட்டுமின்றி விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்துக்கொள்ளாமல் வியாபாரிகள் எடுத்துக்கொண்டுவரும்  நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் விற்பனைக்கு எடுத்ததால் விவசாயிகள்  நெல்மூட்டைகள்  தேங்கியதாகவும், அதுவே இந்த சேதத்தை சந்திக்க காரணம் என,’’ அவர் குற்றம்சாட்டினார்.