கொரோனா ஊரடங்கின்போது அடையாறு ஓடைக்குப்பம் பகுதியில் குடம் குடமாகப் பதுக்கிவைக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட சுண்டக்கஞ்சியை இன்று சென்னை காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். அதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அறிக்கையில்,’சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை முற்றிலும் தடுக்க வேண்டும் எனவும் மேலும் கொரோனா ஊரடங்கின் போது பிறப்பிக்கப்படும் விதிமுறைகளை மீறி நடப்பவர்களின் மீதும் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு காவல் அணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் அளித்துள்ள உத்தரவைப் பின்பற்றியும் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளர் திரு.கண்ணன் இ.கா.ப அவர்கள் மற்றும் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் & தெற்கு மண்டல இணை ஆணையாளர் (பெறுப்பு) திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் ஆலோசனைகளின் படியும் அடையாறு மாவட்டம் துணை ஆணையாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்கள் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைத்து அடையாறு மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.




தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சாதகமாக பயன்படுத்தி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பணை செய்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தவகையில் சாஸ்திரி நகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஓடைகுப்பம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சுண்ட கஞ்சி காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையினரான உதவி ஆய்வாளர் திரு.செல்வகுமார் தலைமை காவலர்கள் திரு.வெங்கடேசன் திரு.சங்கர முதல் நிலை காவலர்கள் திரு.சண்முகம் மற்றும் பூர்ண குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தததில் அப்பகுதியை சேர்ந்த அஜித் வயது 27 செல்வம் வயது 40 மற்றும் மகேந்திரன் வயது 49 ஆகிய மூவரையும் அவர்களின் வீடுகளில் பதுக்கி வைத்து அந்த பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. சுண்ட கஞ்சி தயார் செய்ய பயன்படுத்தி வந்த 25 க்கும் மேற்பட்ட ஊரல்களையும் கைப்பற்றி அழித்தனர். அரசால் தடைசெய்யப்பட்ட கண்ட கஞ்சி காய்ச்சியதோடு பதுக்கி வைத்து விற்பணை செய்ததற்காகவும் மேலும் ஊரடங்கு விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓடை குப்பம் பகுதி மக்களுக்கு விற்பனை செய்தமைக்காக மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அடையாறு மாவட்ட பகுதிகளில் யாரேனும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிய வந்தால் அவர்களின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அடையாறு மாவட்ட துணை ஆணையாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

Also Read:‛பாலியல் தொல்லையும், ஆசிரியர்கள் கைதும்’ தமிழகத்தை உலுக்கிய சமீபத்திய சம்பவங்கள்!