நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் ஈடுபடுவதற்கான, முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார்.‌ அதில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, நமது இலக்கு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல்தான் என விளக்கிக் கூறியிருந்தார்.


தொடர்ந்து தான் சில படங்களில் நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்திருந்தார். 


"கட்சி அமைப்பை பலப்படுத்தும் விஜய் "


என்னதான் ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் கட்டமைப்பாக உருவாக்கி இருந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் குளறுபடிகள் இருந்த வண்ணம் இருந்தன. ஒரு சில மாவட்டங்களில், கோஷ்டி பூசலும் அதிகமாக இருந்து வந்தது. இதுபோக ஒரு சில மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக, விஜய் மக்கள் இயக்கம் கட்டமைப்பை உருவாக்காமல் தோய்வாக இருந்தும் வருகிறது.


இவற்றையெல்லாம் சரி செய்ய விஜய் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து கட்சி அமைப்பு ரீதியாக கட்டமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் 


தமிழ்நாட்டிலேயே இதுவரை எந்த அரசியல் கட்சியும் எடுக்காத ஒரு முடிவை நடிகர் விஜய் எடுத்திருந்தார். அதாவது கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் விஜய் உத்தரவை பிறப்பித்திருந்தார்.‌


ரூ.2 கோடி உறுப்பினர் இலக்கை விஜய் அடைவாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழாமல் இல்லை. கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து, உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



 


வாழ்த்து பதிவு மட்டும் 


அரசியல் கட்சி துவங்குவதாக விஜய் அறிவித்து, நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் , இதுவரை வாழ்த்து மற்றும் இரங்கல் அறிக்கைகள் மட்டுமே விஜய் தரப்பிலிருந்து வருகிறது. இதுவரை எந்தவித பொது பிரச்சனைகளுக்கு, விஜயின் கருத்து என்ன என்பது இதுவரை வெளிப்படவில்லை.


விஜயின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை கூட,  நேரடியாக வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.‌ இதுவரை விஜய் நேரடியாக, "இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கதல்ல" என்ற அறிக்கை மட்டுமே வெளியிட்டு இருந்தார்.


பல இடங்களில் அவர் அம்பேத்கர், காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் பற்றி பேசி இருப்பதால், அவரது அரசியல் நிலைப்பாடு ஓரளவுக்கு புரிந்து கொண்டாலும், நேரடியாக விஜய் இதுவரை அரசியல் சார்ந்த அறிக்கைகளை தராமல் இருப்பது மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது .




 


கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் கூட பத்திரிக்கையாளர் கேட்கும் அரசியல் கேள்விக்கு பதில் அளிக்காமல் ,"தலைவர் வருவார், தலைவர் பேசுவார், இலக்கு 2026" என கிளிப்பிள்ளை மாதிரி பேசி வருவது, ஒரு சிலர் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியும் வருகிறது.


நிர்வாகிகள் சொல்வதென்ன ?


இது சம்பந்தமாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவிக்கையில், ”அரசியல் சார்ந்தும் அரசியல் நிலைபாடுகளை சார்ந்தும் பேசுவதற்காக, கட்சித் தலைமை செய்தி தொடர்பாளர்களை அறிவித்திருக்கிறது. செய்தி தொடர்பாளர்கள் பல்வேறு ஊடகங்கள் மூலம், கட்சி நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர்" என தெரிவிக்கின்றனர்.


இப்படி புரிந்து கொள்ளலாமா ?


கட்சி துவங்கிய பொழுது நடிகர் விஜய்  "அரசியல் என்பது எனக்கு இன்னொரு தொழில் அல்ல, அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. ஏற்கனவே நான் ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் " என்று தெரிவித்திருந்தார்.



இதை வைத்து பார்க்கும்பொழுது திரைப்படத்தில் நடிப்பதால் தான் கூறும் கருத்தால், படம் வெளியிடுவதில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டும், என்பதற்காக விஜய் சில காலங்களுக்கு தீவிர அரசியலை தவிர்க்கிறார் எனக் கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள். ஏனென்றால் ஒரு திரைப்படம் திரையில் வெளியிடுவதற்கு பலதரப்பட்ட நபர்களின், ஒத்துழைப்பு தேவை என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. எனவே விஜய் நேரடியாக அரசியல் கருத்தை முன்வைக்க , இன்னும் சில காலம் ஆகலாம் அதுவரை அவரது தொண்டர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.