டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமின்..


யூடியூப் 40 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட பிரபலமான டிடிஎஃப் வாசன், மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், விபத்தில் சிக்கினார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். 




பைக்கை எரித்துவிடலாம்..


காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார் டிடிஎப் வாசன். அந்த ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும், அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து,  youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடுலாம் என கருந்து தெரிவித்து இருந்தார்.

 

மூன்று வாரங்களுக்கு..

 

இதனிடையே டிடிஎப் வாசனுக்கு நவம்பர் 9-ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் இரண்டாவது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது எனவும், மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.




 

உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து டி.டி.எஃப்.வாசன் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது நண்பர்கள், குடும்பத்தினர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த டிடிஎஃப் வாசனை அழைத்து சென்றனர்.

 

சிறை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிஎஃப் வாசன் : மிகப்பெரிய விபத்தில் சிக்கிய தனது முதுகில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும், 10 ஆண்டுகள் எப்படி ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம் எனவும், 6 மாதங்கள், 1ஆண்டு மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகவும், நானாக எனது கையை உடைத்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஆதங்கம் தெரிவித்தார்.

 

வாழ்க்கையை அழிப்பதாக பேச்சு

 

சிறை அனுபவம் கடினம்தான் எனவும், சிறையில் அதிகாரிகள் பண்பாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். 10ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் செய்யப்பட்டுள்ளது என்பது திருத்துவதாக இல்லை எனவும், வாழ்க்கையை அழிப்பதாக உள்ளதாக தெரிவித்தார். தன் மீது கொடுத்த புகாரே தவறாக உள்ளதாக கூறினார். வாகனத்தை ஓட்டுவது தான் தன்னுடைய விருப்பம் எனவும் தன்னுடைய விருப்பத்தையே தொழிலாக மாற்றி உள்ளதாகவும் வாசன் தெரிவித்தார். உங்களை பார்த்து சிறுவர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது குறித்த கேள்விக்கு நீங்கள் ஏன் சிறுவர்களுக்கு பைக் கொடுக்குறீர்கள் என டிடிஎஃப் வாசன் பெற்றோர்களுக்கு வினா எழுப்பினார்.

 

என்னை பார்த்து சிறுவர்கள் ஈர்க்கப்பட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாக கூறும் நிலையில் எதை பார்த்துதான் அனைவரும் ஈர்க்கவில்லை எனவும், தான் கூட சிறுவனாக இருந்தபோது என்னுடைய பெற்றோரிடம் ஹெலிகாப்டர் கேட்டேன் என வாசன் தெரிவித்தார்.

 

சர்வதேச ஓட்டுனர் உரிமம்

 

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெறலாம் தற்போதைய ஓட்டுநர் உரிமம் ரத்த தொடர்பாக மேல்முறையீடும் செய்யலாம் எனவும் தெரிவித்தார். தன்னுடைய கை எலும்பு முறிந்தபோது கூட கவலைப்படவில்லை எனவும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது தெரிந்தபோது கண் கலங்கியதாக தெரிவித்தார்., பத்தாண்டுகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டபோது மிகவும் கவலைப்பட்டதாக தெரிவித்தார்.

 

சர்வதேச ஓட்டுநர் உரிமம் பயன்படுமா ?


இந்தநிலையில், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் டிடிஎஃப்  வாசன் வாகனத்தை ஓட்ட முடியாது அதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், சொந்த நாட்டில் வாகன  ஓட்டுநர் உரிமம் ரத்தாகும், பொழுது சர்வதேச ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும், என தமிழக போக்குவரத்து துறை ஆணையரகம்  தெரிவித்துள்ளது.