காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு தடபுடலான அசைவ விருந்து
நாடாளுமன்றத் தேர்தல் 2024 ( parliament election 2024 )
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய அமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று தமிழ்நாட்டிலும் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தங்களுடைய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதானம் கட்சிகளாக இருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.
திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பூத் வாரியாக ஆட்களை நியமித்து அவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று அதிமுக சார்பிலும் பூத் வாரியாக, கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்சிகளாக இருக்கக்கூடிய பாமக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களுடைய கட்சி அமைப்பை பலப்படுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பூத் கமிட்டி கூட்டம்
அந்த வகையில் அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிரணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை உள்ளிடக்கிய பூக்கம்பட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது, இன்று காஞ்சிபுரம் மாநகர் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு பகுதி அதிமுக செயலாளர்கள் ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அந்தந்த பகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெற்றது.
இதில் அதிமுக மருத்துவர் அணி செயலாளர் வேணுகோபால் கலந்துகொண்டார். இதில் அந்தப் பகுதிக்கு உட்பட்ட வட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்களது புகைப்படங்களை ஒட்டி கமிட்டி அமைப்பதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கிய அவர்களுக்கு தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தடபுடலாக பிரியாணி விருந்து
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக நிர்வாகிகளுக்கும், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் தடபுடலான அசைவ விருந்தானது கிழக்கு மாநகர செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் அளிக்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் வெகு மகிழ்ச்சியாக, பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்
சர்ச்சையை தொடர்ந்து, தனி கவனிப்பு
முன்னதாக அதிமுக மாநாட்டின் பொழுது உணவு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது அதிமுகவினர் தங்களுடைய தொண்டர்களுக்கு உணவு வழங்குபொழுது, தனி கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே, அதிமுக சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் உணவுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும், ஆனால் மாநாட்டின் பொழுது நடைபெற்ற கவனக்குறைவு பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது என்பதால், தொடர்ந்து உணவு விஷயத்தை அதிமுக நிர்வாகிகள் கண்காணித்து வருவதாக , அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.