அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கோயம்பேடு-பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்திருந்த நிலையில், இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருந்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பான தீர்ப்பினை நாளை காலை 9 மணிக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு காரணமாக நாளை (ஜூலை11) பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை, வானகரம் அருகில் நாளை (11.06.2022) நடைபெறும் நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து மெதுவாக செல்லவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே, வாகன ஓட்டிகள். பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் நாளை (11.07.2022) காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம், தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளவும், மாற்று பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்