சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவின்போது பேனர்கள் கிழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதால் அதிமுகவினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா உருவப்படம் பேரறிஞர் அண்ணா உருவப்படம் முன்னாள் மாவட்ட செயலாளர் உருவப்படம் பதித்த பேனர்கள் முதற்கொண்டு கிழிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
ஆனால் பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். மேலும் அதிமுக ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு என பிரிந்து இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் சென்னை வானகரத்தில் உள்ள அதே மண்டபத்தில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நாளைய தினம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். அதேசமயம் பொதுக்குழுவுக்கு தடைக் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு சொல்வதாக தெரிவித்துள்ளார்.
9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படியும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். கடந்த பொதுக்குழுவில் போலி அடையாள அட்டை மூலம் வெளியாட்கள் நுழைந்ததாக கூறப்பட்ட நிலையில் இம்முறை நவீன முறையில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
அதாவது மெட்ரோ ரயில் நிலையம் போல தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டையுடன் கூடிய மின்னணு எண் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும் வகையில் ஏற்பட்டுள்ளது. இதற்காக பொதுக்குழு, செயற்குழு நடக்கும் இடங்களில் 20 ஸ்கேன் பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்