தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டு, முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை இம்முறை சந்தித்துள்ளது. மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு, முன்பு மொத்தம் 213 வார்டுகள் இருந்தன. ஆனால், தற்போது உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 70 வார்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.




தாம்பரம் மாநகராட்சியில் திமுக தலைமையிலான கூட்டணியில் 12 வார்டுகள் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 58 இடங்களில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது.  ஆனால் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னம் 62 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 5 இடங்களில் கை சின்னத்தில், விசிக ஒரு இடத்தில் தென்னைமரம் சின்னத்திலும், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடத்திலும் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதிமுகவை பொறுத்தவரை 70 இடங்களிலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.


அதிலும் கவுன்சிலர் பதவியைப் பிடித்து மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற திமுக கடுமையாக போராடி கொண்டிருக்கிறது. மொத்தம் சுயேச்சைகள் என மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், திமுக, அதிமுக இடையே மட்டுமே கடுமையான போட்டி ஏற்பட்டது.  மேயர் பதவி பட்டியல் இன  பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 4, 12, 13, 27, 31, 51 ஆகிய 6 வார்டுகள் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக, பொது வார்டான 32-வது வார்டில் திமுக வேட்பாளராக ஆதிதிராவிட பெண் வசந்தகுமாரியை நிறுத்திவிட்டது.



அதேபோல, திமுக எம்பியான ஜெகத்ரட்சகனின் மைத்துனர் ஜி.காமராஜ் 30-வது வார்டில் போட்டியிடுகிறார். திமுகவைப் பொறுத்தவரை 31 வது வார்டில் போட்டியிடும் சித்ராதேவி, மற்றும் 32 வது வார்டில் போட்டியிடும் வசந்தகுமாரி ஆகிய இருவருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வெற்றி பெற்றால் மேயர் பதவியை குறிவைத்து, கேட்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் பதிவான ஓட்டுக்கள், குரோம்பேட்டை எம்.ஐ.டி.  கல்லுாரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.




ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.வாக்குறுதிமுதல் முறையாக நடக்கும் மாநகராட்சி தேர்தல் என்பதால், வேட்பாளர்களிடம் இருந்து, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் என, பலதரப்பட்ட கவனிப்புகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வேட்பாளர்களும், கவனிப்பில் மட்டுமின்றி, வாக்குறுதிகளையும் வாரி வழங்கியதால், எதிர்பார்த்த அளவு வாக்காளர்கள் ஓட்டுப்பதிவிட வருவர் என நம்பப்பட்டது.தேர்தல் நாளன்றும், பல வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களை வைத்து, வீடு வீடாக சென்று வாக்காளர்களை ஓட்டுப்போட வருமாறு அழைத்து வந்தும், பலர் ஓட்டளிக்கவில்லை. இதனால், 49.98 சதவீதம் ஓட்டுக்களே பதிவானது


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும்