சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதையடுத்து 5,794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  திமுக 167 வார்டுகளிலும், காங்கிரஸ் 16 வார்டுகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 வார்டுகளிலும் ,சி.பி.எம் 5 வார்டுகளிலும், சி.பி.ஐ, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் தலா 3 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. அதிமுக 198 வார்டுகளில் போட்டியிடுகிறது. புரட்சி பாரதம் 2 இடங்களில் போட்டியிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி 187 இடங்களும் போட்டியிடுகிறது. 

 



 

இதையடுத்து நாளை 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மண்டலம் 1, பகுதி 1-14 வரை பதிவான வாக்குகளை திருவொற்றியூர், டி.எச்.ரோடு, வெள்ளையன் செட்டியார் மெட்ரிக் பள்ளி, மண்டலம் 2, பகுதி 15-22 வரை, மணலி, நெடுஞ்செழியன் சாலை, சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி, மண்டலம் 3, பகுதி 23-33 வரை, அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் ரோடு, சூரப்பேட்டை, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மண்டலம் 4- பகுதி 34-48 வரை, தண்டையார் பேட்டை, ஆர்.கே.நகர், காமராஜ் சாலை, அரசு பாலி டெக்னிக் கல்லூரி, மண்டலம் 5, பகுதி 49-63 வரை, பிராட்வே, புரசைவாக்கம், பாரதி பெண்கள் கல்லூரி, மண்டலம் 6, பகுதி 64-78 வரை, திரு.வி.க.நகர், நம்மாழ்வார்பேட்டை, மண்டலம் 7, பகுதி 79-93 வரை, அம்பத்தூர், முகப்பேர், மண்டலம் 8, 94-108 வரை பச்சையப்பன் கல்லூரி, மண்டலம் 9, பகுதி 109-126 வரை, லயோலா கல்லூரி.

 


மண்டலம் 10, பகுதி 127-135 வரை விரும்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி, மண்டலம் 11, பகுதி 143-155 வரை, மதுரவாயல் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி. மண்டலம் 12, பகுதி 156-167 வரை, ஆலந்தூர் ஏ.ஜே.எஸ். மேல் நிலைப்பள்ளி, மண்டலம் 13, பகுதி 168-180 கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், மண்டலம் 14, பகுதி 181-191 வரை பள்ளிக்கரணை ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி, மண்டலம் 15, பகுதி 192-200 வரை சோழிங்கநல்லூர், மேடவாக்கம், முகமது சதக்கலை அறிவியல் கல்லூரிகள் என 200 வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வகையில் 15 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் தேர்தல் பணியில் 27 ஆயிரம் ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகராட்சி 51-வது வார்டில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடி , 179-வது வார்டில் அமைந்துள்ள பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி ஆகிய இரண்டு இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

 


யாருக்கு மேயர் வாய்ப்பு? 


சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 16 வார்டுகளில் இருந்துதான் சென்னை மேயர் தேர்வு செய்யப்பட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேயர் தேர்வு என்பது இந்த முறை மறைமுகத் தேர்தலாக நடத்தப்படும் என்பதால் ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரே சென்னை மேயராக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதன் படி சென்னையில் உள்ள 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196 ஆகிய 16 வார்டுகளில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 31, 77 வார்டுகளில் காங்கிரஸும் 135ஆவது வார்டில் விடுதலைச் சிறுத்தைகளும் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளரை களம் இறக்கி உள்ளனர்.



இந்த நிலையில் இந்த வார்டுகளை தவிர்த்து மீதமுள்ள 13 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் திமுகவை சேர்ந்த ஒருவரே சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியல் இன பெண் மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட்டியல் இன பொதுப்பிரிவினருக்காக  ஒதுக்கப்பட்டுள்ள 16 வார்டுகளில் வார்டு எண் 17-இல் திமுக சார்பில் கவிதா நாராயணன் என்ற பெண் வேட்பாளரும் களத்தில் உள்ளார். இவர் வெல்லும் பட்சத்தில் கவிதா நாராயணனும் மேயர் பொறுப்பிற்கு போட்டியிட தகுதி உள்ளவர் என கூறப்படுகிறது.