தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 25 கோடி மதிப்புடைய 3.6 கிலோ ஹெராயின் போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, சுற்றுலா பயணி ஒருவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.

 

சென்னை சர்வதேச விமான நிலையம் ( chennai international airport )


 

சென்னை ( Chennai News ) : தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை தியாகராயநகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளின் தனிப்படையினர்,சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து அந்த குறிப்பிட்ட விமானத்தில் வந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்துக்கொண்டு இருந்தனர்.

 

மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 

 

அப்போது சென்னையில் வசிக்கும் வட மாநில இளைஞரான  ஜான் ஜூட் தவாஸ் (32) என்பவர்,  தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்று விட்டு, சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதை அடுத்து அவரை மத்திய வருவாய் புலனாய் பிறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்க துறை அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று தீவிரமாக பரிசோதித்தனர். அதோடு அவருடைய கைப்பையை பரிசோதித்தனர். கைப்பைக்குள் ரகசிய அறை வைத்து செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

 

சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 25 கோடி

 

அந்தக் கைப்பையில் உள்ள ரகசிய அறையை திறந்து பார்த்தபோது, அதனுள் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 3.6 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 25 கோடி. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பயணி ஜான் ஜூட் ஜவாஸை கைது செய்து, விசாரணைக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஒரே நேரத்தில் ரூபாய் ரூ.25 கோடி மதிப்புடைய ஹெராயின் போதை பொருள்

 

இவர் இந்த போதைப் பொருளை யாருக்காக கடத்தி வருகிறார்? இவரை இந்த கடத்தலுக்கு அனுப்பி வைத்த சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார்? இவர் இதற்கு முன்பு இதை போல் போதை கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் போதைப் பொருளை ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, தாய்லாந்து வழியாக சென்னைக்கு கடத்திக்கொண்டு வந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூபாய் 25 கோடி மதிப்புடைய ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, சுற்றுலா பயணி ஒருவர், செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.