சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் தமிழ்நாடு அரசின்  விரைவு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கமாக எஸ்.சி.டி.சி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுவதும், பழுது பார்ப்பதும் நடைபெற்றுவரும். சென்னையில் இருந்து பெங்களூருக்கு மார்க்கமாக செல்லக்கூடிய சொகுசுப் பேருந்து ஒன்று பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் கரும் புகை சூழ்ந்தது. இதனால் அண்ணாநகர் கிழக்குப் பகுதி முழுவதுமே ஒரு புகைமண்டலமாக மாறிவிட்டது. இந்த தீ விபத்து குறித்து பணிமனையில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த பேருந்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.  தீ அணைப்புத் துறையினர் விரைவாக தீயை அணைத்ததால் தீ மேற்கொண்டு மற்ற பேருந்துகளுக்கோ அல்லது பணைமணையில் மற்ற பகுதிகளுக்கோ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.






இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஊழியர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர். அரசு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து இருந்ததால் இந்த பகுதிகள் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக மாற்றுப் பேருந்தை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ளது.