வேலூர் மாவட்டம் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான காவல் துறையினர் நேற்று (15.03.2023) இரவு மலைகோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சிலர் சிலை கடத்தி விற்க முயல்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில், மலைக்கோடியில் பள்ளிகொண்டா செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து திடீரென தப்பியுள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர்களை சினிமா பட பணியில் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற காவல்துறையினர் சாத்துமதுரை அருகே இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர். அவர்கள் கையில் வைத்திருந்த கட்டைப் பையை காவல்துறையினர் பறிமுதல் செய்து அதனை சோதனை செய்தனர்.
அந்த பையில் காய்கறி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலை ஒன்று மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பது தெரிய வந்தது. அந்த ஐம்பொன்னால் ஆன சிலை ஒன்றரை (1 1/2) அடி உயரமும், ஐந்தரை கிலோ (5 1/2) எடை கொண்ட சிலையை பறிமுதல் செய்த காவல்துறையினர், சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜ் வயது (43), கண்ணன் வயது (42) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிலையை கடத்தி வந்ததும் அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அரியூர் காவல் துறையினர். பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சிலை கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் சிலை எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.