மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைத்து ஊரடங்கை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம் - இது வரை 1100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 1000க்கும் மேற்பட்ட விதிகளை மீறி வணிக நிறுவனங்கள் சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிப்பு- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி.



 


கொரோனா பரவலையடுத்து தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் சோதனை சாவடிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் செய்திளாயர்களிடம் பேட்டியளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், ‛‛திருவண்ணாமலை மாவட்டத்தில் 1900 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர்,போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மாவட்டம் முழுவதும் 16 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் நடமாட்டம் மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து வணிக நிறுவனங்களின் விதிமீறல்கள் ஆகியவை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக 3 கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி ஊரடங்கை தீவிரமாக நடைமுறை செய்து வருவதாகவும், இது வரை 1000க்கும் மேற்பட்ட விதிமீறி வணிக நிறுவனங்களுக்கு அபராதம்,கடைகளை மூடி சீல் வைத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்தார்.


 



 


மேலும் ஊரடங்கை மீறி பொது வெளியில் சுற்றி திரிந்த 1100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி பொது வெளியில் சுற்றிபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் பற்றி தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் முககவசம் மற்றும் பொது வெளியில் சமூக இடைவெளி,பொது வெளியில் நடமாட்டத்தினை பொது மக்கள் தவிர்த்தால் மாவட்டத்தில் கொரோன தாக்கம் வெகு விரைவில் குறையும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தெரிவித்தார்.



தொடர்ந்து வெளியூர்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நிறைய பேர் வருகை தருவதால் சோதனை சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேவையற்ற வாகன புழக்கத்தை தவிர்க்கவும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என போலீசார் முடிவுசெய்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். விதிகளை மீறி பயணிப்பவர்களை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.,யின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நேரடியாக எஸ்.பி., களமிறங்கியதால், போலீசாரும் அலர்ட் ஆகியுள்ளனர்.