மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த படப்பிடிப்பு தளத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தமிழகத்தில் (சென்னை) நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சூட்டிங் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
அதே போல கொரோனா ஊரடங்கு காரணமாக இம்மாதம் 31ம் தேதி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் எதுவும் தமிழகத்தில் நடக்காது என்று பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலையாள பிக் பாஸ் படப்பிடிப்பு தடையை மீறி நடத்தப்பட்டதாக கூறி அந்த படப்பிடிப்பு நடந்து வந்த பகுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 நடிகர் நடிகைகளும் மேலும் அந்த படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்துவந்த சுமார் 50 தொழிலாளர்களும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விதிகளை மீறி செயல்பட்டதாக தெரிவித்து வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சீல் வைத்ததோடு அபராதமும் விதித்தாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அங்கு பணியாற்றிய 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட அந்த 6 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்திய அளவில் பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகின்றது. தமிழில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 4 சீசனாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பிக் பாஸின் மூன்றாவது சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ரைசா வில்சன் சில தினங்களுக்கு முன்பு தனக்கு முகத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரிவித்த நிலையில் அவர் முகம் மீண்டும் பொலிவுடன் மாறியிருப்பதை சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரைசா முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவர் பைரவி செந்திலை அணுகியுள்ளார். அப்போது பைரவி செந்தில், ரைசாவிற்கு 'Botox Treatment' என்ற சிகிச்சை வழங்க பரிந்துரை செய்துள்ளார். மேலும் அந்த 'Botox Treatment' ரைசாவின் முகப்பொலிவுக்கு மிகவும் ஏதுவானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை ரைசா வில்சனுக்கு மேற்குறிப்பிட்ட இந்த சிகிச்சை 25.03.2021 அன்று டாக்டர் பைரவி செந்திலின் உதவியாளர்கள் டாக்டர் வனிதா மற்றும் மணி என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே பைரவி செந்திலின் உதவியாளர்களிடம் அந்த சிகிச்சையை மேற்கொள்ள ரைசா தயக்கம் கட்டியதாகவும் அந்த லீகல் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பைரவி உறுதியளித்ததன் அடிப்படையில் அந்த சிகிச்சை ரைசாவிற்கு வழங்கப்பட்டது.
ரைசா விவகாரத்தில் முணுமுணுக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் பெயர், தற்போது சீல் நடவடிக்கையால் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது.