திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் உள்ள, பழைய பேருந்து நிலையம் எதிரில் குழல் என்ற தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது. இந்த கிளினிக்கை சிவரஞ்சனி என்ற மருத்துவர் நடத்தி வருகிறார் . அரசு மருத்துவராக பணியாற்றிவந்த சிவரஞ்சனி,கடந்த 1 1/2  வருடங்களுக்குமுன்பு  பிரசவ விடுப்பு எடுத்து, அதன் பின் பணியில் திரும்ப சேரவே இல்லை . இதனை தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கையாக மருத்துவத்துறை அதிகாரிகள்  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிவரஞ்சனியை பணிநீக்கம் செய்தனர் .


 



பனி நீக்கத்திற்கு பின்பு பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும்  தனது தனியார் கிளினிக்கை (குழல் கிளினிக்) சிவரஞ்சனி முழுநேரமும் கவனிக்கத் தொடங்கினார்  . தற்பொழுது கொரோனா பரவல் அதிகம் உள்ள சூழ்நிலையை பயன்படுத்தி , பணம் சம்பாதிக்க நினைத்த சிவரஞ்சனி,முதற்கட்டமாக தனது கிளினிக்கிலேயே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தொடங்கியுள்ளார். பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கை கூடியதாலும், தனது கிளினிக்கில் இடப்பற்றாக்குறை இருந்ததாலும் தனது கிளினிக்குக்கு எதிரே தற்காலிக இரும்பு ஷீட்களை கொண்டு ஒரு கூடாரம்போல் அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார் .



இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒரு மருத்துவ அதிகாரி ஆரணி சுற்றியுள்ள பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகளவில் பரவி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. தற்போது ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் ஆரணி அருகே உள்ள தச்சூர் பொறியியல் கல்லூரி மற்றும் கொரோனா சிகிச்சை அளிக்கும் தற்காலிக மையங்கள் உள்ளிட்டவை நிரம்பிவருவதால் . இது போன்ற சிறிய கிளினிக்குகளை தேடி நோயாளிகள் படை எடுக்க தொடங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவை சட்டவிரோதமாக செயல்படக் கூடியவை . இந்த  கிளினிக்குகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அரசு எந்த உரிமையும் தரவில்லை . மேலும் ஆரணியில் உள்ள தனியார் கிளினிக்கில் மருத்துவ அடிப்படை வசதி இல்லாமல் கொரோனா சிகிச்சை மேற்கொள்வதாக பொதுமக்களின் புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கண்ணகி தலைமையில் மருத்துவ குழு மற்றும் போலீசார் வருவாய் துறையினர் குழல் கிளினிக் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் ஆய்வின் போது சிவரஞ்சனி 10-க்கும் மேற்பட்ட கொரோனா   நோயாளிகளுக்கு சட்டவிரோதமாக வெட்டவெளியில் வைத்து சிகிச்சை அளித்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



இது தொடர்பாக பேசிய மருத்துவ இணை இயக்குனர் கண்ணகி, சிவரஞ்சனி நடத்தி வரும் குழல் கிளினிக் சீரோ பெட் (zero bed ) கிளினிக் ஆகும் . இதில் நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை செய்வதற்கு அனுமதி கிடையாது . அதிலும் இவர் கொரோனா அறிகுறி மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெட்டவெளியில் , தகர ஷீட்களை மட்டும் அமைத்து சிகிச்சை அளித்து வருவது முற்றிலும் சட்ட விரோதமானது. இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை திருவண்ணாமலை , ஆரணி மற்றும் செய்யார் அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக மாற்றம் செய்து இருக்கிறோம் .மேலும் சட்டத்துக்கு புறம்பாக மருத்துவம் பார்த்த சிவரஞ்சனியின் குழல் கிளினிக்கை சீல்வைத்து , அவர் தற்காலிகமாக படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடனான கிளினிக்கை அப்புறப்படுத்தவும், சிவரஞ்சனி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்தார் .