தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்த நிலையில், இன்று மதியம் முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென மாலை 4 மணிமுதல் மழை பெய்யத் தொடங்கியது.


இதுதொடர்பாக, தகவல் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதவிர, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் சென்னையைப் போலவே அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.