மின் மயானத்தில் பிணங்களை எரியூட்டும் வேலை. ஆண்களே சவாலாக நினைக்கும் பணியை துணிந்து செய்து வருகிறார் கண்ணகி. இப்பணிக்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கையால் ஒளவையார் விருதைப் பெற்றவர் இவர்.



 


ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் ஆண்களுக்கு சவாலாக, சுடுகாட்டில் சடலங்களை எரியூட்டும் தொழிலில் பெண் ஒருவர்  9 ஆண்டுகளாக  ஈடுபட்டு வருகிறார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்  ஈசானிய லிங்கம் அருகே உள்ள சுடுகாட்டில்  9 ஆண்டுகளாக பிணங்களை எரியூட்டும் வேலையை செய்துவரும் கண்ணகி, தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் சடலங்களையும் பாதுகாப்போடு எரியூட்டிவருகிறார். இவர் ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து சடலங்களை எரியூட்டி வருகிறார். 


நகராட்சி தகன மேடையில் பணிபுரியும் கண்ணகி ABP NADU குழுமத்திற்கு அளித்த பேட்டி: 


‛‛நான்  ஏழை குடும்பத்தை சேர்ந்தவள் . என்னுடைய அப்பா சண்டமார்கம் அம்மா வள்ளியம்மாள். நான் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள்  மேல்நிலை பள்ளியில் 12 வகுப்பு முடித்துவிட்டு வாலாஜா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை முடித்தேன். என்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவள். பட்டப்படிப்பை முடித்தவுடன் அம்பேத்கர் வழியில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக  குரல் கொடுத்து வந்தேன். அவர்களுக்காகவே பல நாள் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வந்தேன். இதற்கு இடையே எனக்கு திருமணம் ஆனது. இப்போது எனக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். முதலாவதாக என்னுடைய பணியை தனியார் தொண்டு நிறுவனத்தில் அனிமேட்டராக தொடங்கினேன். அப்போது  குடிசை பகுதியான தியாகி அண்ணாமலை நகர், கல்நகர், சமுத்திரம் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 450 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாகவும், ஓடு வீடாக்கும் தொண்டு நிறுவனம் மூலம் மாற்றிக் கொடுத்தேன்.


 



 


அதன் பின்னர் பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி, அதன்பின் மகளிர் குழுவில் இணைந்து, மகளிருக்கு வங்கியில் இருந்து கடன்களை பெற்று தருவது போன்ற வேலைகளை புரிந்து வந்தேன்.என்னிடம் எந்த பணிகள் கொடுத்தாலும் அதில் குறைகள் இல்லாமல் செய்து முடித்து விடுகிறேன் என்ற நம்பிக்கையில்  மகாதீபம் அறக்கட்டளை சார்பாக நகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஆணையர் விஜயலட்சுமி ஆகியோர் எனக்கு தொடர்பு கொண்டு ' ஆண்களுக்கு இணையாக சவாலான பணி' ஒன்று இருக்கிறது. செய்ய உங்களால் முடியுமா என்று கேட்டார்கள். நான் எந்த பணி கொடுத்தாலும் செய்வேன் என்று கூறினேன். அதன்பின்பே திருவண்ணாமலை நகராட்சி மின் தகன எரி மேடையில் பணிபுரியும் வேலையை கொடுத்தார்கள்.



2013 மார்ச் 8-ம் தேதி அன்று மகளிர் தினம் கொண்டாடும் வேளையில் பதவியில் சேர்ந்தேன். நான் வேலைக்கு வரும் போது பல கஷ்டங்களை அனுபவத்தேன். எல்லாருடைய பார்வையும் என்மேல் இருந்தது. அவர்கள் எல்லோரும்,  'ஒரு பெண், நீ மயானத்துக்கு போற வேலையை எப்படி செய்ற? பிணம் எரிக்கிறது எல்லாம் ஒரு வேலையா? உங்களை பார்த்தாலே குமட்டாலா இருக்கு' என்றெல்லாம்  ஒருவித கிண்டலாக  பேசினார்கள். அருவெறுப்பு பார்வைகள் எல்லாம் என்மேல் இருந்தது.  ஆனால் நான் அதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் என் பணியை சிறப்பாக செய்துவந்தேன்.


அது இல்லாம என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சில பெண்கள் 'சுடுகாட்டில் பாம்பு இருக்கும், பேய் இருக்கும் என கூறினார்கள்.' ஆனால், நான் தகன மேடை எதிரே உள்ள அண்ணாமலையார் மலையை பார்த்துதான் இங்கு வந்து வேலை செய்கிறேன். எனக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என வேண்டிக்கொள்வேன்.இந்த தகன மேடையில் இதுவரை 3005 உடல்களை எரித்துள்ளேன். அதற்காக 2020 ஆம் ஆண்டு தமிழக அரசால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் ஔவையார் விருது பெற்றேன். இது மற்றுமின்றி பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். இன்னும்  மகளிர் குழுக்களுக்கு செயலாளராகவும், குழுவிற்கு தலைவராகவும், தகன எரிவாயு மேடையின் பொறுப்பாளராகவும் தற்போது வரை மிக சிறப்போடு பணியாற்றி வருகிறேன். 


தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இன்னும் கூடுதலாக சவாலான பணிகளை இப்போது செய்து வருகிறேன். திருவண்ணாமலை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் இருந்தும், நகராட்சி  பகுதிகளில் இருந்தும்  கொரனா தொற்றினால் ஒரு நாளைக்கு 10 லிருந்து 15  உடல்கள் எரியூட்டுவதற்காக இங்கே வருகின்றது. உடல்களை எரிக்கும் பொது எங்களுக்கு கொரனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், நம் நாட்டிற்காக மனதை கல்லாக்கிகொண்டு இந்த பணியை செய்து வருகிறேன். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை பார்க்கக் கூட முடியாமல் பல உறவுகள் இங்கே தவிக்கின்றனர். அப்பாவை இழந்துவாடும் பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த அப்பாக்கள் என  எல்லாருமே இங்க அனாதை போல வந்து அழுது நிற்கும்  அந்த காட்சிகள் என்னை ரொம்பவும் மன வேதனையில் ஆழ்த்துகிறது.


 



கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த கண்ணகி சொல்லி உங்களுக்கு தெரிய போவது ஒன்றுமில்லை. பொதுமக்களாகிய உங்களுக்கே எல்லாம் தெரியும். தயவு செய்து மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் இருக்கும் வேண்டும்,’’ என்று அவர் கூறினார்