திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்பி கொல்லை பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டு துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் கம்பி கொல்லை பகுதியில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர் .
அப்போது இளைஞர் ஒருவர் ஊருக்குள் காவல்துறையினரை நுழைவதை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை, சிறிது தூரம் துரத்தி சென்று பின்னர் அவரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள பலாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது . சில வருடங்களுக்கு முன்பு ஆம்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட சதிஷ் குமார் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கி வருகிறார் என்று கண்டறிந்தனர் .
அவர் தான் கள்ளத்தனமாக வாங்கிய நாட்டு துப்பாக்கியை கொண்டு , சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள காட்டு பகுதிகளில் , முயல் , புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாடி அதன் இறைச்சி , தோல் மற்றும் மானின் கொம்புகளை கள்ளச் சந்தையில் விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. சதிஷ் குமார் போலீசாரிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் ஆம்பூரில் உள்ள சதிஷ்குமாரின் மாமியார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் சோதனையின் முடிவில் , குற்றவாளி சதிஷ் குமார் தனது மாமியார் வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 3 மான்கொம்புகளை பறிமுதல் செய்த ஆம்பூர் நகர காவல்துறையினர் அவரை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ABP குழும நிறுவனத்துக்காக, நம்மிடம் பேசிய ஆம்பூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் திருமால், குற்றவாளி சதீஷ்குமார் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் , வனவிலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி தனி நபராக வேட்டைகளில் ஈடுபட்டாரா அல்லது கைது செய்யப்பட்ட சதீஷ் குமாருக்கு உடந்தையாக கூட்டாளிகள் எவரேனும் உள்ளனரா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார் .