Tiruvallur New Bus Stand: திருவள்ளூரில் 5 ஏக்கர் பரப்பளவில், 33 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
30 ஆண்டுகால ஏக்கம்:
தலைநகர் சென்னையின் முதல் அண்டை மாவட்டம் தான் திருவள்ளூர். இந்த நகரம் அந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு நகருக்கான இணைப்பாகவும் உள்ளதன் மூலம், தொழிற்சாலைகளுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாகவும் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அமைந்து இருப்பதால், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருவள்ளூருக்கு தினசரி பயணிக்கின்றனர். இதன காரணமாக, பல்வேறு வழித்தடங்களுக்கு அங்கிருந்து 200-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பிலேயே இருந்தது.
குறுகலான சாலையால் போக்குவரத்து நெரிசல்:
நகராட்சி அந்தஸ்தை கொண்டுள்ள திருவள்ளூரில் தற்போதுள்ள பேருந்து நிலையமானது, வெறும் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மொத்தமாக அங்கு 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். குறுகலான சாலை மற்றும் குறுகலான வெளியேறும் பகுதி போன்ற காரணங்களால், போக்குவரத்து ஓட்டுனர்களே அவதிப்பட்டு வருகின்றனர். மறுபுறம் பேருந்து நிலையத்தைச் சுற்றி பள்ளிகள், பெட்ரோல் பங்க், குடியிருப்புகள், கடைகள் மற்றும் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் திருவள்ளூர் மக்களுக்கு கடும் இன்னலாக உள்ளது.
5 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்
இதனால் திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க, கடந்த 2023ம் ஆண்டு ஜுலை மாதம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர் அருகில் உள்ள வேடங்கிநல்லூரில், 33 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 15 மாதங்களுக்குள் திட்டப் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பணிகள் தொடர்ந்து மந்தகதியில் நடைபெற்றதால், குறிப்பிட்ட காலத்திற்குள் 60 சதவிகித பணிகள் மட்டுமே முடிவடைந்து இருந்தது. இந்நிலையில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து, புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், திருவள்ளூர் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை பூர்த்தி அடையும். மேலும், நகர்ப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக குறையும்.
புதிய பேருந்து நிலையத்தின் வசதிகள்..!
புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடையும்போது, அதில் ஏராளமான வசதிகள் இடம்பெற உள்ளன. அதன்படி 5,889 ச.மீ. பரப்பளவில் அமையும் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 45 புறநகர் பேருந்துகள், 11 நகரப் பேருந்துகள் என மொத்தம் 56 பேருந்துகள் இயக்க முடியும். தரைதளம் மற்றும் முதல்தளம் என 2,493 ச.மீ. பரப்பளவில் பிரதான கட்டடம் அமைய உள்ளது. மேலும், 107 கடைகள், 550 இரு சக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு ஒன்று என மொத்தம் 5 கழிவறைகளும் அமைய உள்ளன.