Tiruvottiyur New Bus Stand Proposed Project: சென்னை திருவொற்றியூரில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது.

சென்னை மிக அதிதீவிர வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. தொடர்ந்து சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பேருந்து, மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவைகளை அரசு மேம்படுத்தி வருகிறது. 

சென்னை மெட்ரோ ரயில் சேவை:

அந்த வகையில் சென்னையின் மிக முக்கிய வரப்பிரசாதமாக மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது. தொடர்ந்து புதிய மெட்ரோ அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் புதிய பணிமனை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையம் - Tiruvottiyur New Bus Stand 

திருவொற்றியூர் மெட்ரோ பணி நடைபெற்ற போது, மாணிக்கம் நகர் பிரதான சாலையில் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு செயல்பட்டு வந்த பேருந்து நிலையம், அஜாக்ஸ் நகருக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆஜாக்ஸ் நகரில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வே, கோயம்பேடு, தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு தினம்தோறும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் போதிய அளவில் இடவசதி இல்லாததால் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகி உள்ளன. அதேபோன்று இங்கிருந்து புறநகர் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல சிரமமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையம் டெண்டர் : Tiruvottiyur New Bus Stand Location 

பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில் திருவொற்றியூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மாநகர பேருந்து நிலையம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் வெளியிடப்பட்டு பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஒரு வருடத்தில் நிறைவடையும் பணி

திருவொற்றியூர் மெட்ரோ அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள பழைய கட்டிடங்கள் ஆகியவை அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. பேருந்து நிலையம் மற்றும் பணிமனை என இரண்டும் தனித்தனியாக அமைய உள்ளன.

பேருந்துகள் உள்ளே வந்து செல்ல புதிய சாலைகள், காத்திருக்கும் பயணிகளுக்கான இருக்கைகள், முறையான கழிப்பறை வசதி, போதிய வாகனங்கள் நிறுத்த வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இங்கிருந்து எளிதாக திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன. அடுத்த ஓராண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.