தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக  மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சென்னை சென்ட்ரலில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ரயில் பாதையின் மூலம் இணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 90 இரயில் நிலையங்கள் உலக தரம் வாய்ந்ததாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களையும் இரயில் போக்குவரத்து மூலம் இணைக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலின் படி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்கள் உள்பட நாளொன்றுக்கு ஒரு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். 


ஏ.சி. வகுப்பு கட்டணம் குறைப்பு


வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை வகுப்பு கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 25 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில் வாரியம் அறிவித்துள்ளது. ஏசி சேர் கார், எக்ஸிகியூடிவ் வகுப்பு கட்டணங்களை குறைத்து ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இந்த கட்டண குறைப்பு, அனுபூதி மற்றும் விஸ்டாடோம் கோச் உள்பட ஏசி வசதி கொண்ட அனைத்து ரயில்களின் ஏசி சேர் கார் மற்றும்  எக்ஸிகியூடிவ் வகுப்புகளுக்கும் பொருந்தும். கட்டண குறைப்பானது அடிப்படை கட்டணத்தில் இருந்து அதிகபட்சம் 25 சதவிகிதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


முன்பதிவு கட்டணம், அதிவிரைவு கூடுதல் கட்டணம், ஜிஎஸ்டி போன்ற பிற கட்டணங்கள் தனித்தனியே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிரம்புவதன் அடிப்படையில் குறிப்பிட்ட வகுப்பிலேயோ அல்லது அனைத்து வகுப்புகளிலேயோ கட்டண குறைப்பு அமல்படுத்தப்பட உள்ளது.


கடந்த 30 நாள்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக நிரம்பிய ரயில்களில் கட்டணத்தை குறைக்க மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தளவுக்கு கட்டண குறைப்பு மேற்கொள்ளலாம் என்பது அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மாற்று போக்குவரத்து வசதிகளின் கட்டணத்தை அளவுகோலாக கொண்டு நிர்ணயிக்கப்பட உள்ளது.


முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு பணம் திருப்பி செலுத்தப்படுமா?


இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு, கட்டண குறைப்பின் காரணமாக பணம் திருப்பி செலுத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் எங்கிருந்து புறப்படுகிறது என்பதன் அடிப்படையில், கட்டண குறைப்பு எப்போது அமல்படுத்தப்படுகிறதோ அந்த தேதியில் இருந்து அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையில் முதற்கட்டமாக, எத்தனை காலம் வரை கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும் என்பதை மண்டல ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளர் முடிவு செய்வார்.


மேற்கூறிய காலத்தின் தேவை அடிப்படையில் முழு காலத்திற்கோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது மாதம் வாரியாகவோ அல்லது பருவகாலத்திற்கோ அல்லது வார நாட்கள்/வார இறுதிகளுக்கோ கட்டண குறைப்பு வழங்கப்படலாம்.


கட்டண குறைப்பில் ஏதேனும் மாற்றம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டால் அதுவும் உடனடியாக அமல்படுத்தப்படும். எவ்வாறாயினும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளிடமிருந்து கட்டண வித்தியாசம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.