மோடியின் குடும்பப்பெயர் குறித்துப் பேசியது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, சூரத் நீதிமன்றம் தனக்கு வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கக்கோரியும், மறுபரிசீலனை செய்யக்கோரியும் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த குஜராஜ் உயர் நீதிமன்றம், சூரத் விசாரணை நீதிமன்றத்தின் தண்டனை உத்தரவு சரியானது என்றும், அந்த உத்தரவில் தலையிட தேவையில்லை என்றும், எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தது. மேலும், ராகுல் காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.



சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

”ராகுல்காந்தி 8 முறை வழக்கில் தோல்வி அடைந்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என கூறுகின்றனர். கொள்கை என்ன? சீனாவிடம் இருந்து நம்முடைய நிலங்களை எப்படி மீட்க முடியும்.  அமெரிக்காவிடம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை பேச வேண்டும். எப்போதும் கிண்டல் அடித்துக்கொண்டு ஜோக்கர் மாதிரி இருக்க கூடாது. ராகுல்காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும்” என செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்

 


Defamation Case: 'குஜராத் மண்ணில் நீதி கிடைக்காது; சரியான நடவடிக்கை'- ராகுல் மனு தள்ளுபடி பற்றி தலைவர்கள் கருத்து!


 இந்தநிலையில், ராகுல் காந்தியின் மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் அதிருப்திய வெளிப்படுத்தி வருகின்றனர்.


குஜராத் மண்ணில் எங்களுக்கு நீதி கிடைக்காது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி: 



இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். குஜராத் மண்ணில் எங்களுக்கு நீதி கிடைக்காது. ஆனாலும் சட்டவிதிமுறைகளின்படி, ஒவ்வொரு நீதிமன்றமாக சென்றுதான் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். உச்ச நீதிமன்றத்தில் நிச்சயமாக எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். சட்டரீதியாக நாங்கள் போராடுவோம், மக்கள் மன்றத்திற்கு சென்று போராடுவோம். இவர்கள் ராகுல் காந்தியை முடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள், அது முடியாது. ராகுல் காந்தி மகாத்மா காந்தியை போன்ற லட்சியவாதி, கொள்கைவாதி. எதன் பொருட்டும் பின்வாங்காதவர். அவருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தோழர்கள் இருக்கிறார்கள். எனவே, இதுதான் எங்கள் முடிவு, இதை எதிர்கொள்வோம்.


பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது: நாராயணன் திருப்பதி - பாஜக 


குஜராத் உயர் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீதிமன்றத்தின் கருத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸும் ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன். ராகுல் காந்தியின் நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது. ஒரு ஜாதி குறித்து, ஒரு அமைப்பு குறித்து இவ்வாறு பேசுவது தவறு. ராகுல் காந்தி இனிமேலாவது தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். 


இழக்கப்படும் நம்பகத்தன்மை: முத்தரசன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


நீதிமன்றம் 2 ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை கொடுத்தது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கலவரத்தில் முஸ்லீம் மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் போட்ட பொது நல வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து கடந்த 2022 ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பால் நம்பகத்தன்மை இழக்கப்படுகிறது என முத்தரசன் சி.பிஐ தெரிவித்தார்