தொழிலதிபரை பொய் வழக்கில் கைது செய்து தாக்கிய போலீசாருக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் உஸ்மான், கூடலூர் பஞ்சாயத்தின் 12வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். 

 

கடந்த 2019ம் ஆண்டு தனது நண்பரின் வாகனத்தில் தொழிலாளர்களுடன் கேரளாவில் இருந்து  நீலகிரி திரும்பியுள்ளார். அப்போது, தேவாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின் போது அவரது காரை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். 

 

அப்போது உஸ்மான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில், முன்விரோதம் காரணமாக பொய் வழக்கில் தன்னை கைது செய்து துன்புறுத்தியதாகவும், இதற்கு காரணமான கூடலூர் காவல் நிலைய அப்போதைய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் , தேவாலா காவல் நிலைய முன்னாள் கான்ஷ்டபிள் செல்லப்பாண்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தார். 

 

இந்த புகாரை விசாரித்த ஆணையம், காவல்துறையினருக்கு எதிராக உஸ்மான் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, உஸ்மானுக்கு இழப்பீடாக மூன்று லட்சம் ரூபாயை நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தொகையை சம்பந்தப்பட்ட காவலர்களிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டார்.