மருத்துவ சிகிச்சை குறைபாடு காரணமாக, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் பலியான விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தாய்க்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தாலுகாவில் உள்ள முக்கூடலைச் சேர்ந்த லதா என்பவரின் மகள் தேவி, பிரசவத்துக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நிலையில், லதாவின் அனுமதியுடன் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

 

அதன்பின் தேவிக்கு சிறுநீர் வெளியேறாமல் அவதிப்பட்டுள்ளார். நிலைமை மோசமானதை அடுத்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில்  சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

 

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தேவி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே தனது மகள் பலியானதாகவும், தற்போது மகளின் பிஞ்சு குழந்தை உள்பட இரு குழந்தைகளுடன் சிரமப்படுவதாக கூறி சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த புகார் மனுவை விசாரித்த ஆணையம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளித்திருந்தால் தேவி மரணமடைந்திருக்க மாட்டார் எனவும், மருத்துவர்கள் அஜாக்கிரதையுடன் நடந்து கொண்டது. ஆவணங்களில் இருந்து நிரூபணமாகி உள்ளதாகக் கூறி, பலியான தேவியின் தாய் லதாவுக்கு நான்கு வாரங்களில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.



மற்றொரு வழக்கு


 

பணிநீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பணி வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரி, டாஸ்மாக் முன்னாள் ஊழியர் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை, அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் உதவியாளராக பணியாற்றிய விஜயகுமார், மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் அவர் 8 ஆண்டுகளாக பணிக்கு வரவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தனக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என விஜயகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடந்த 2013ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

 

அதன்படி, விஜயகுமாரின் விண்ணப்பத்தை பரிசீலித்த டாஸ்மாக் நிர்வாகம், விசாரணை நடத்தி, அவரை பணிநீக்கம் செய்து 2014ம் ஆண்டு உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது தனது குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளதாக கூறி, மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என விஜயகுமார், கடந்த ஆகஸ்ட் மாதம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தார். அதை பரிசீலிக்க கோரி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஏற்கனவே 2014ல் பணி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடராமல், பணி நீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்ததன் மூலம், விஜயகுமார், சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியுள்ளதாக கூறி, அவரது வழக்கை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

அபராதத்தொகையை 30 நாட்களில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.