சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தனர். ஆனால், வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார். நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்த நீதிபதி, கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, பெற்றோர்களை கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தந்தை மகற்காற்றும் உதவி... என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, சமுதாயத்தின் பொது பண்புகளை இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது சமூகம் இந்த விழுமியத்தின் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
மற்றொரு வழக்கு
10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி தொடர்பான விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கு புலன் விசாரணை என்பது ரகசியமானது எனவும், இந்த ரகசியத்தன்மை தான் புலன் விசாரணை வெற்றி பெற வழிவகுக்கும் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி தொடர்பாக ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் மீதான வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வேலூர், சென்னையில் செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபினான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம், பொதுமக்களிடம் டிபாசிட்களைப் பெற்று, பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிக வட்டி வழங்குவதாகக் கூறி, முதலீடுகளைப் பெற்றது. இவ்வாறு பெற்ற முதலீடுகளைப் பயன்படுத்தி, நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், குற்றம் சாட்டப்பட்ட சிலரை கைது செய்தது. இதுசம்பந்தமாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த வழக்கின் புலன் விசாரணை குறித்த விவரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என போலீசாருக்கு தடை விதிக்கக் கோரி, வழக்கில் கைது செய்யப்பட்டவரின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்த மோசடி தொடர்பாக வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மட்டுமே வழக்கின் விவரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த விவரங்களை வெளியிடுவது நீதி பரிபாலனத்தை பாதிக்கும் எனவும், வழக்கு புலன் விசாரணை என்பது ரகசியமானது எனவும், இந்த ரகசியத்தன்மை தான் புலன் விசாரணை வெற்றி பெற வழிவகுக்கும் எனவும் கூறி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை விவரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என பொருளாதார குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.