சென்னையில் கனமழை பெய்து வருவதால் சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மழைக்கு ஒதுங்கியவர்கள், பெட்ரோல் போட வந்தவர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சைதாப்பேட்டையில் உள்ள ஜோன்ஸ் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்புப்பணிகளை செய்துவருகின்றனர். இந்த சம்பவத்தில் மேற்கூரையின் கீழே சிக்கி  பெட்ரோல் பங்கின் ஊழியர் கந்தசாமி என்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் இருந்து 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 


ஏற்கனவே இந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரையில் மழைநீர் தேங்கி இருந்ததால் பாரம் தாங்காமல் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது. 


சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மீனம்பாக்கம், சாந்தோம், மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணியில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. போரூர், பழவந்தாங்கல், வளசரவாக்கத்திலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 


மீனம்பாக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கிண்டி, மயிலாப்பூர், திருவொற்றியூர், வேளச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வயப்பு என வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தேனி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.