சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுக. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சி ரீதியாக பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுகவின் அமைப்பு ரீதியாக இருந்து வந்த 75 மாவட்டத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கட்சி ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 84 ஆக உயர்த்தி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதுமுகங்கள் 12 பேருக்கு மாவட்ட செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
விரைவில் பிற மாவட்டங்களிலும், அமைப்பு ரீதியான புதிய மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து நம்ம மாவட்டம் தான் பிரிக்கப்பட போகிறது என காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் பேசத் துவங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் பதவி வகித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றுக்கு பொறுப்பாளராக உள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளராக சிட்லபாக்கம் ராஜேந்திரன் பதவி வகித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு, தாம்பரம் ,பல்லாவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளராக திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பதவி வகித்து வருகிறார். இவர் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் , திருப்போரூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
சென்னை புறநகர் பகுதியாக உள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஒரே சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே கடந்த 2021-தேர்தலில், அதிமுக சார்பில் வெற்றி பெற்று இருந்தார். எனவே, சென்னை புறநகர் மாவட்டத்தை பலப்படுத்தும் முடிவில் கட்சித் தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் கூடுதலாக ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை உருவாக்கவும் முடிவு செய்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் கிசுகிசுக்க துவங்கியுள்ளனர்.
வாய்ப்பு 1
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு மாவட்டச் செயலாளரை உருவாக்க வாய்ப்பு
போட்டியில் உள்ளவர்கள்
1. முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர் மன்ற தலைவருமான டி. கே. எம் சின்னையா தரப்பு மாவட்டச் செயலாளர் பதவிக்கு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த டி.கே.எம். சின்னையா இந்த முறை எப்படியாவாது மாவட்ட செயலாளர் பொறுப்பை பெற முயற்சி செய்வதாக தகவல்கள் கூறுகின்றன.
2. அதே மாதிரி, காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வரும் கஜா என்கிற கஜேந்திரன் தரப்பும் தீவிரமாக மாவட்ட செயலாளர் பொறுப்பை பெற முயன்று வருகிறது. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது, கஜேந்திரன் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும், புது முகங்களில் மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக சம்பத் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி கனிதா சம்பத் 2001 - இல் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2011- இல் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகவும் போட்டியிட்டு வென்றவர் . கடந்த தேர்தலில் செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இவரும் மாவட்டச் செயலாளர் ரேசில் உள்ளார்.
வாய்ப்பு 2
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி அடங்கிய மாவட்ட செயலாளர் பதவி .
போட்டியில் உள்ளவர்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த, முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வாலாஜாபாத் பா. கணேசன் தரப்பும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. தற்பொழுது வாலாஜாபாத் கணேசன் அமைப்புச் செயலாளராக பதவியில் இருந்து வருகிறார். மேலும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
வாய்ப்பு 3
செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதி உள்ளடக்கி ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என மற்றொரு தரப்பு முயற்சி செய்து வருகிறது. நிர்வாக ரீதியில் அவ்வாறு பிரிப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
கணிப்புகள் என்ன ?
தற்பொழுது, இருக்கும் 3 மாவட்டச் செயலாளர்களும் எந்த வித மாற்றம் இன்றி தொடர்வார்கள் என அடித்து கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஆனால், எந்த 2 மாவட்டச் செயலாளர்களிடமிருந்து, 2 தொகுதிகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து மேலிடம் ஆலோசித்து வருவதாக அதிமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னாள் மாவட்ட செயலாளர்கள் இருவர் கொடுக்கும் அழுத்தத்தாலே, புதிய மாவட்டம் பிரிப்பது சற்று தள்ளி போவதாக கூறப்படுகிறது. மேலிடமோ புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என பரிசீலனை செய்து வருவதாக, கூறப்படுகிறது. இதனிடையே 3 மாவட்டச் செயலாளர் இணைந்து, ஒரு ஒன்றியத்திற்கு டிக் அடித்து தலைமையிடம் கொடுத்திருப்பதாகவும் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. யார் அந்த ஒன்றியம் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தலைமையில் இருந்து அறிவிப்பு வரும் வரை, பதவியில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கும் லேசான தலைவலி இருக்கத்தானே செய்யும்.