ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நடவடிக்கை எடுக்கிறோம் என தங்களை  நியாயப்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக ஆனந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆரணியாற்றில் கும்முனிமங்கலம் முதல் இலட்சுமிபுரம் அணைக்கட்டு வரையான இரு கரைகளிலும் சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வணிக வளாகங்களையும், வீடுகளையும் கட்டி ஆக்கிரமித்துள்ளதாகவும், ஆற்றின் கரைகளை பலப்படுத்த அரசு ஒதுக்கிய நிதியில்,  ஆக்கிரமிப்பை அகற்றாமல் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

 


 

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, முறையான நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆக்கிரமிப்பு என தெரிந்தால் அதை அப்புறப்படுத்த அரசு தயங்குவதில்லை என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது? ஒவ்வொரு ஆக்கிரமிப்பையும் நீதிமன்றம் உத்தரவுக்கு பின்பு தான் அகற்றுவீர்களா? என கேள்வி எழுப்பியதுடன், நடவடிக்கை எடுக்கிறோம் என கூறி அதிகாரிகள் தங்களை  நியாயப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
 

சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் ஆக்கிரமிப்புகள் என்பதே இருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள், புகார் அளித்தவரும் இறந்து விடுவார்,  அதிகாரிகளும் மறந்து விடுவார்கள், ஆனால் ஆக்கிரமிப்புகள் மட்டும் தொடரும் என வேதனை தெரிவித்து, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.