மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க, நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜூன் 20 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (ஜூலை 11) வெளியாகின. பி.ஆர்க். தாள் 2-ன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் ஜூலை 12ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வின் 2ஆவது அமர்வுக்குத் தேர்வர்கள் இரண்டு விதமாக விண்ணப்பிக்கலாம்.
ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வை எழுதிய தேர்வர்கள் விண்ணப்பிக்க
---------------------------------------------------------------
* https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளப் பக்கத்துக்குச் செல்லவும்.
* அமர்வு 1-ல் அளித்த விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
* அதில் 2ஆவது அமர்வுக்கான தாள், தேர்வு எழுதும் மொழி, நகரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அத்துடன் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
* ஜேஇஇ மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
* அதில் தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
* 2022ஆம் ஆண்டுக்கான ஜூன் ஜேஇஇ மெயின் தேர்வு தாள் 1-ன் முடிவுகள் திரையில் தோன்றும்.
* ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
புதிய விண்ணப்பப் பதிவுகளுக்கு
---------------------------
* https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளப் பக்கத்துக்குச் செல்லவும்.
* விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் புதிதாக உருவாக்க வேண்டும்.
* விண்ணப்பப் படிவத்தை கவனத்துடன் பூர்த்தி செய்யவேண்டும்.
* தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
* ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.