செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை பெற்றுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 10 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், தலைமையில் ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் விருது மற்றும் விருதுக்கான தொகை சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக தொழிற்துறை அமைச்சர் பேசியதாவது, செங்கல்பட்டு மாவட்டம், புதியதாய் உதயமாகி நடைபெறும் இரண்டாவது ஆசிரியர் தினவிழா. செங்கல்பட்டு மாவட்டத்தில் 860 அரசு பள்ளிகளும் 842 அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்படுகிறது. 2021-22ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 2,08,041 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,34,402 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 2,80,403 மாணவர்களும் பயில்கின்றனர்.
தாம்பரம் : நைட் ட்ரைவ்.. கோர விபத்தில் ஐந்து பொறியாளர்கள் உயிரிழப்பு..!
இந்த பெருந்தொற்று காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதள வகுப்புகள் மூலம் பாடங்களை பயிற்றுவித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளனர். தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் நல்லதொரு நிலை அடைவதற்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்தியாவின் எதிர்காலத் தூண்களாகிய மாணவர்களை நல்வழிபடுத்தி ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்க பாடுபடும் ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிட்லபாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக செயற்பட்டு வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் முனைவர் ந.கி.சொக்கலிங்கம் அரசு தனக்கு கொடுத்த விருது பணம் பத்தாயிரத்தை கொரோனா நிதியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அப்பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.ரோஸ் நிர்மலா , மாவட்டக் கல்வி அலுவலர் அ.நாராயணன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாற்றுத்திறனாளி ஆசிரியர் முனைவர் ந.கி.சொக்கலிங்கம் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றின் பெருந்துயரில் இருந்து தமிழகம் மீண்டு எழுந்து வருவதற்கு தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று எண்ணிய காரணத்தினால், தனக்கு கிடைத்த பத்தாயிரம் ரூபாய் விருது தொகையை தமிழக அரசுக்கு திருப்பி வழங்கியதாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X