கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள மஞ்சை நகரில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக டீ கடை வைத்திருப்பவர் ராமு. இவர் தனது டீக்கடையில் உதவும் கரங்கள் என்ற பெயரில் ஒரு உண்டியல் ஒன்றினை வைத்து டீ கடைக்கு வரும் நபர்கள் கொடுக்கும் தொகையையும் தனது டீக்கடை வருமானத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பலரும் வேலை இழந்து வருமானம் இன்றி தங்கள் குடும்பத்தினை கவனிக்க முடியாமல் தவித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் கூட தனது டீக்கடை மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை மனித நேயத்தோடு ஏழை மக்களுக்கு என தன்னால் முயன்ற உதவிகளை செய்து வந்தார். ஆதரவற்ற பள்ளிக்கு இலவசமாக நாள்தோறும் டீ கொடுப்பது, மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவிகள் வழங்குதல் போன்றவற்றை இப்பொழுதும் தொடர்ந்து செய்து வருகிறார்.

 


 

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் முழுவதும் பாம்புகளை பிடித்து காடுகளில் விட்டு சேவை செய்து வந்த பூனம்சந்த் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் எட்டு லட்ச ரூபாய் வரை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து உதவி செய்தார். அதனைத் தொடர்ந்து இவருடன் இணைந்து பல நண்பர்களும் ராமுவின் உதவிக்கரம் என்ற பெயரில் பல ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

 


கடலூர் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகராக இருந்தவர் சண்முகம் என்பவர் அவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துவிட்டார். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்த டீக்கடைக்காரர் ராமு, மறைந்த சமூக சேவகர் சிட்டு சண்முகம் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் இரு பெண் குழந்தைகள் பவதாரணி, மகிழினி பெயர்களில் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் முப்பது ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து உதவி உள்ளார்.



 

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, மக்களுக்கு என ஓடி ஓடி சேவை செய்த சமூக ஆர்வலர்களின் குடும்பம் அவர்களுக்கு பிறகு கஷ்டப்படும் நிலைமையை காண முடியாததால் என் டீ கடை வருமானத்தில் இருந்தும் மற்றும் மக்களாக முன்வந்து கொடுக்கும் பணத்தினைகொண்டு அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என்று கூறினார்.

 


 

இந்த கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு பணம் இருந்தாலும் வைத்தியம் பார்க்க முடியாமல் பல மக்கள் உயிரிழந்துள்ளனர் , மற்றொரு புறம் தங்களின் அன்றாட வாழ்வினை வாழவே கொரோனா ஊரடங்கு காலத்தில் பணம் இல்லாமல் பல மக்கள் தவித்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் இயன்றவரை இல்லாதவர்களுக்கு உதவி செய்துவரும் கடலூரின் மனிதநேய நாயகன் டீக்கடைக்காரர் ராமுவை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.