சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி (எஸ். எஸ். ராமசாமி படையாச்சி), செப்டம்பர் 16, 1918 அன்று கடலூரில் பிறந்தார். இந்திய விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவர். சட்டமன்ற உறுப்பினராகவும், காமராஜர் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவரது பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராக இருந்தது. ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த அதிமுக அரசு அறிவித்தது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது உருவப்படத்தையும் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் 2.15 கோடி செலவில் ராமசாமி படையாச்சியாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவரின் வெண்கலச் சிலையும் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் ராமசாமி படையாச்சியாருக்குத் தனி இடம் உண்டு. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உழைப்பாளர் பொதுநலக் கட்சியைத் தொடங்கினார் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி. அந்த தேர்தலில் வட மாவட்டங்கள் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து 19 சட்டமன்றத் தொகுதிகளையும் 4 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் காமராஜரால் ஆட்சியமைக்க முடியவில்லை.
இதையடுத்து, வெளியில் இருந்து ஆதரவு கொடுத்ததால் ராஜாஜி முதல்வர் ஆனார். அடுத்து வந்த நாட்களில் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவி விலகினார் ராஜாஜி. இதையடுத்து, தூதுவரை அனுப்பி ராமசாமி படையாச்சியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் காமராஜர். இதன் தொடர்ச்சியாக அரியணையில் காமராஜர் ஏறுவதற்கும் முக்கியக் காரணமாக இருந்தார்.
இந்நிலை கடந்த ஆட்சியில் சட்டப்பேரவைக் கூட்ட அரங்கில், விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி யாரின் முழுஉருவப்படம் முந்தைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டு, எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி இன்று அவர்களின் 104 வது பிறந்த நாளையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று சென்னை சின்னமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமசாமி படையாச்சியாரின் திருவுருவ சிலைக்கு வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.