தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபர். 6, 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 18 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, 3 சுழற்சிகளில் 24 மணி நேரமும் ஊரக உள்ளாட்சி அமைப்பு பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழுவினா் போக்குவரத்து வாகனங்களில் சோதனை மேற்கொள்ளுதல், தோ்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். 50,000 ரூபாய்க்கு மேல் எந்தவொரு ஆவணமுமின்றி வேட்பாளா்களோ, அவா்களது முகவா்களோ, யாதொரு நபா்களோ அல்லது பொதுமக்களோ எடுத்துச் செல்வதை இந்தக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். சுவரொட்டிகள், தோ்தல் தொடா்பான பொருள்கள், பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் மற்றும் ஆயுதங்கள், வெடி பொருள்கள், அனுமதியற்ற வாகனங்கள் நடமாட்டத்தையும் இந்த குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.



முகையூா், திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி, மேல்மலையனூா், காணை, கோலியனூா், விக்கிரவாண்டி, வானூா், கண்டமங்கலம், மயிலம், மரக்காணம், வல்லம், ஒலக்கூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சுழற்சி முறையில் 18 பறக்கும் படை குழுக்களுக்கும் கண்காணித்து வருகின்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாம் நாளான நேற்று வரை 1,774 போ் வேட்புமனுக்க தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளில் கிராம ஊராட்சித் தலைவா், வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 65 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். இரண்டாம் நாளான நேற்று ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 4 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 320 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,143 பேரும் என மொத்தம் 1,467 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கல் தொடங்கிய இரண்டு நாள்களில் மொத்தம் 1,537 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 2-ஆம் நாளான நேற்று வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 6 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 147 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 478 பேரும் என மொத்தம் 631போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். முன்னதாக, புதன்கிழமை கிராம ஊராட்சித் தலைவா், வார்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கு 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இரு நாள்களிலும் மொத்தம் 650 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இரு மாவட்டங்களிலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.