திருவண்ணாமலை மாவட்டத்தின் 22-வது மாவட்ட ஆட்சியராக பி.முருகேஷ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார், அதனைத் தொடர்ந்து, புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட திட்ட இயக்குனர் பிரதாப் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள்  மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள முருகேஷ், ”காவல்துறையில் உள்துறை துணை செயலாளராகவும், அதன்பின்னர் வீட்டு வசதிதுறையின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 24 ஐ. ஏ. எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார் முருகேஷ்.
 


புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ், “திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 252-ஆக உள்ளது. 
"கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை முழுமையாக துரிதப்படுத்தி, தொற்றைக் கட்டுப்படுத்தி ('Zero Cases' ) கொரோனா வைரஸ் தொற்று  இல்லாத மாவட்டமாக ஆக்குவதே என்னுடைய முதல் பணி” என்றார். மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அதிகரித்து கிராமப்புறங்கள் போன்ற பகுதிகளில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும், மக்கள் நகர் பகுதியில் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் அதிக அளவில்  கூடுவதை கட்டுப்படுத்தவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு குழுக்கள் அமைத்து கண்காணிப்பு ஏற்படுத்தப்படும் என்றும்,  தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றும் தெரிவித்தார்.


மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள், சுகாதாரம், சுற்றச்சூழல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆன்மீக ஸ்தலமான திருவண்ணாமலை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நீண்ட கால திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும். அரசின் வழிகாட்டுதலின்படியும் மற்றும் மாவட்ட  அமைச்சர்களின் ஆலோசனைப்படியும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்படுவேன்' என்று தெரிவித்தார் .




திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 350-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகி வந்தது. அது சற்று குறையத் தொடங்கி கடந்த நான்கு நாட்களாக நாளுக்கு நாள் மேலும் எண்ணிக்கை குறைந்த பதிவாகியுள்ளது. இதனால் இந்த மாவட்ட மக்கள் சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 46951 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 44747 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 197 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 659 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று 2 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 



திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம், போளுர் , ஆரணி , வந்தவாசி  உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன . தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 10806 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.