தமிழ்நாட்டிற்கு அதிக மழையை தரக்கூடிய வட கிழக்கு பருவமழை, கடந்த மாதம் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
நாளை கனமழை இல்லாத மாவட்டங்கள்:
இந்நிலையில், நாளை (நவம்பர்-2 ஆம் தேதி) எந்த பகுதிகளில் கனமழை இருக்காது என தெரிந்து கொள்வோம்.
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 20 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இம்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, மழை பெய்யாது என தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை கனமழை பெறும் மாவட்டங்கள்:
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை(நவம்பர்- 2) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, வானிலை மையம் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும், அதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். tamilrain_fc.pdf (imd.gov.in)
நாளை மறுநாள் கனமழை:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள்(நவம்பர் 3ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை பெறும் மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர்-1) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read: Chennai Rain: சென்னை மக்களே! இரண்டு சுரங்கப்பாதைகள் மூடல்; சென்னை பெருநகர காவல் துறை அறிவிப்பு!