சென்னையில் தொடர்மழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் கணேசபுரம் மற்றும் இரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.


இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்தில், மழைநீர் அதிகம் தேங்கியுள்ளதால் கணேசபுரம் மற்றும் இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் போக்குவரத்திற்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சுரங்கப்பாதைக்கு பதிலாக பொதுமக்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்லலாம். அதுபோலவே, கணேசபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தலாம்.






வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நம்ம சென்னை செயலிக்கான லிங்க் https://play.google.com/store/apps/details?id=com.ceedeev.grivenancev2&hl=en_IN&gl=US


சென்னையில் மழை - உதவி எண்கள் அறிவிப்பு:


சென்னையில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு 1913,


044-25619206, 044-25619207,


044-25619208 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்,


‘நம்ம சென்னை செயலி' அல்லது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வழியாகவும் தொடர்புக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.


மழை அறிவிப்பு:


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்புகளுக்கு ஏற்றவாறு மற்ற குழுவினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






டெல்டா மாவட்டங்கள் உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, அதன் அண்டை மாவட்டங்களை சேர்த்து 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.